துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு குறித்து கவனம் செலுத்தி இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இவ்வாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (24) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அவ்வாறு விடுவிக்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை துரிதமாக சதொச மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்களின் ஊடாக மக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அறிவுறுத்தினார்.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கான பொறுப்பை வர்த்தக அமைச்சும், விவசாயத்துறை அதிகாரிகளும் ஏற்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் நிறைவேற்று பணிப்பாளர் தமது பதவி விலகலை அறிவித்து முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறைமா அதிபரிடம் தான் முன்வைத்த முறைப்பாட்டை துரித கதியில் விசாரிக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கமைய குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் அச்சந்தர்ப்பத்திலேயே காவல்துறைமா அதிபருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தார்.