மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் நுழைவதற்காக வந்த ஆயிரக்கணக்கான மக்களை குவாத்தமாலா எல்லையில் வைத்து குவாத்தமாலா இராணுவத்தினரும் பொலிஸாரும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களில் சுமார் 7,000 பேர் குவாத்தமாலாவுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹொண்டுராஸை சேர்ந்தவர்கள். குவாத்தமாலா, மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவின் எல்லைக்குச் செல்வதற்கு இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு நுழைய முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குடியேற்றவாசிகள் மீதான கடுமையான கொள்கைகளை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார். ஆனால், இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை ஒரே இரவில் மாறிவிடாது எனவும் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில்;, ஞாயிற்றுக்கிழமை குவாத்தமாலாவுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கானோரை அந்நாட்டு படையினரும் பொலிஸாரும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டன.
பெரும் எண்ணிக்கையிலான சட்டவிரோத நகர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என குவாத்தமாலா ஜனாதிபதி அலுவலகம் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அரசியல் புலிடம் கோர முற்படுவோர், அவர்கள் உடனடியாக அமெரிக்காவுக்குள் வர முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என பைடன் நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், என்.பி.சி. அலைவரிசையிடம் தெரிவித்துள்ளார்.
(Photos: AFP)