ராஜபக்ஷவினரின் அரசாங்கத்தின் ஆளும் தரப்பிற்குள் முரண்பாடுகள் வலுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
அதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தமை தொடர்பில் அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ நீக்கப்பட்டு, அந்த பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை நியமிக்க வேண்டும் என 08/02/2021அன்று பத்திரிகை ஒன்றுக்கு விமல் வீரவன்ச கூறியுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்பில் எவ்விதமான தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கான உரிமை தனக்கு இல்லை என்பதை விமல் வீரவன்ச தெரிந்துகொள்ள வேண்டும் என சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவருடைய அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதுடன், அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
எமது கூட்டமைப்பில் இணைந்துகொண்ட ஒருவர் மிக கீழ்த்தரமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து கட்சி என்ற வகையில் கவலையடைவதாகவும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே பெரமுனவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் அதிருப்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனைவிடவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தரப்புக்கள் இருவேறு தரப்புக்களாக இயங்குகின்றமையும் அதுபற்றிய சம்பவங்கள் அவ்வப்போது வெளிப்பட்டுள்ளமையும் அறிந்ததே