பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையுமான மக்கள் எழுச்சிப்பேரணியில் கடந்த 04/02/2021, ம் திகதி மட்டக்களப்பில் கலந்துகொண்டதாக கூறி புகைப்படங்களுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுகட்சி ஊடகசெயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் இல்லத்திற்கு 19.02.2021 அன்று மு.ப 11.30, மணிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளனர்.
இதன்போது பா.அரியநேத்திரன் தமக்கு எந்த பொலிஸ் நிலையங்களாலும் எந்த வித நீதிமன்ற கட்டளைகளும் கிடைக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி வாக்குமூலம் வழங்கியதாக தெரிவித்தார்.
பேரணியில் அரியநேத்திரன் கலந்துகொண்டதாக கூறப்படும் கலர் புகைப்படங்களை பொலிஸார் காண்பித்தனர். ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களில் அரசியல்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்வது தவறில்லை என்பதை வலியுறுத்தியதுடன் தாம் கலந்துகொண்டது உண்மை எனவும் நீதிமன்ற தடை உத்தரவு தமக்கு வழங்கப்படவில்லை என்பதையும் மீண்டும் வலியுறுத்தியதாக மேலும் கூறினார்.
அரியநேத்திரனின் இல்லம் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் அம்பிளாந்துறை ஊராக இருந்தபோதும் மட்டக்களப்பு பொலிஸாரே இந்த வாக்குமூலத்தை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.