ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்யவிருந்த திட்டத்தை தான் கைவிட்டுள்ளதாக இந்தி நடிகை அர்ஷி கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நடிகை அர்ஷி கானின் குடும்பத்தினர் ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானிலேயே அர்ஷி கான் பிறந்தார். நடிகை அர்ஷி கான் (Arshi Khan) தமிழில் மல்லி மிஷ்து என்ற படத்திலும் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
தொலைக்காட்சி தொடர்கள். இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். அர்ஷிகானுக்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் திருமணத்தை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார். இது குறித்து அர்ஷிகான் கூறும்போது,
‘ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கும் எனக்கும் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அவரை எனது தந்தையே தெரிவு செய்தார். தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டோம். எனக்கு கணவராக வர இருந்தவரிடம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டேன். எனது பெற்றோர் எனக்கு இந்திய மாப்பிள்ளையை பார்ப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
நான் ஒரு ஆப்கான் பதான். எனது பாட்டனார் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர். அவர் போபால் சிறையில் சிறைக்காலவராக பணியாற்றினார். ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் எனது பெற்றோர், தாத்தா பாட்டி போன்று நானும் இந்திய பிரஜையே’ என அர்ஷி கான் கூறியுள்ளார்.