பிரிஸ்பேன் மைதானத்தில் அவுஸ்திரேலியாவை 32 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய இந்திய அணி தொடரையும் கைப்பற்றி வரலாறு படைத்தது.
போர்டர் – கவாஸ்கர் கிண்ணத்திற்கான போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 369 ஓட்டங்களையும் இந்தியா 336 ஓட்டங்களையும் பெற்றதுடன், அவுஸ்திரேலிய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 294 ஓட்டங்களுடன் முடிவுற்றது.
வெற்றி இலக்கான 328 ஓட்டங்களை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியாவுக்கு இறுதி நாளான இன்று 324 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ரோஹித் சர்மா 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், அடுத்து இணைந்த சுப்மன் கில் அதிரடியாகவும் சட்டிஸ்வர் புஜாரா பொறுமையாகவும் துடுப்பெடுத்தாடி அணியை வலுப்படுத்தினர்.
3 மணித்தியாலங்கள் களத்தில் நின்ற சுப்மன் கில் 91 ஓட்டங்களையும், சட்டிஸ்வர் புஜாரா 5 மணித்தியாலங்களுக்கு மேல் களத்தில் நின்று 211 பந்துகளில் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், இறுதித் தருணத்தில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 89 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
பிரிஸ்பேன் மைதானத்தில் 1947 ஆம் ஆண்டு முதல் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவிற்கு இதுவே முதல் வெற்றியாகும்.
அதேபோன்று, அவுஸ்திரேலிய அணி 1988 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளிடம் அடைந்த தோல்விக்கு பின்னர் முதல் முறையாக பிரிஸ்பேனில் தோல்வியடைந்துள்ளது.
தொடர் 2 -1 எனும் ஆட்டக்கணக்கில் இந்தியா வசமானதுடன், இதன் மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் டெஸ்ட் தொடரை வென்ற பெருமையை இந்தியா பெற்றது.