ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 15 பேர் காயமடைந்ததுடன் இருவர் பலியாகியுள்ளனர்.
ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், “இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்” என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தாக்குதலையடுத்து வியன்னாவில் பெரும்பாலான பகுதிகள் பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டு மற்ற பயங்கரவாதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. வியன்னா நகர மேயர் இந்த சம்பவம் பற்றி கூறும்போது, இதுவரை 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
நகரின் மையப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகே தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், பயங்கரவாதிகள் அந்த ஆலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்தார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கடுமையானதையடுத்து, அங்கு தேசிய அளவிலான கட்டுப்பாடுகள் நவம்பர் 2ஆம் திகதி அமுலுக்கு வந்தன. இம்மாத இறுதிவரை அங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.