ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் ஒரேநாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசானது இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்து ள்ளது கிழக்கு முனையத்தினை இந்தியாவிற்கு கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது
அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்றையும் சீன கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தினை கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா பார்த்துக்கொள்ளும். ஆனால் வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளை கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்பிற்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து.
13 வது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால்கூட அது மாகாண சபையின் ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது.
எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்கு பதிலாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்று செய்வது மிகவும் சட்டத்திற்கு முரணானது என அவர் மேலும் தெரிவித்தார்.