கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளிடையில் தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் மீதான திட்ட வழி நடத்தல் குழுவின் மீளாய்வு கலந்துரையாடல்கள் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றுள்ளன. தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கான நலன்களை தருவிப்பதற்காக இந்த திட்டங்களை துரிதகதியில் நிறைவேற்றுவதற்கான கூட்டு முயற்சிகள் அடையாளம் காணப்பட்டதுடன் கொவிட்19 காரணமாக இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் மீதும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தி இருந்தனர்.
2.தம்புள்ளையில் 5000 மெற்றிக்தொன் பொருட்களை களஞ்சியப் படுத்துவதற்கான வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியத் தொகுதி ஒன்றினை வடிவமைத்தல் நிர்மாணித்தல் ஆரம்பித்து வைத்தல் தொடர்பாக பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் ,உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்புரி அமைச்சின் செயலாளர் திருமதி பத்ராணி ஜெயவர்த்தன ஆகியோர் தலைமையில் திட்ட வழிநடத்தல் குழுவின் கூட்டம் ஒன்று 2021 ஜனவரி 5ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. அதற்கு முன்னதாக 2020 டிசம்பர் 24ஆம் திகதி பிரதி உயர் ஸ்தானிகர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் தலைமையில் இந்திய உதவியின் கீழ் வடமாகாணத்தில் 27 பாடசாலைகளை புனரமைப்பு செய்தல் தொடர்பான திட்ட வழிநடத்தல் குழு கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த கூட்டமானது மெய்நிகர் வழிமுறைகள் ஊடாக நடைபெற்றிருந்ததுடன் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு இளங்கோவன் அவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். அதேபோல பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்தி, வீட்டு விலங்குகள் பண்ணை ஊக்குவிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிற்செய்கை இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ சேனாநாயக்க மற்றும் பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் ஜேக்கப் ஆகியோர் தலைமையில் 2020 டிசம்பர் 17ஆம் திகதி நடைபெற்றிருந்த கலந்துரையாடல் ஒன்றின்போது மட்டக்களப்பில் 3200 சுகாதார தொகுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தினை விரைவு படுத்தும் பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
3.இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்களை இலக்காகக் கொண்ட அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடமை திட்டங்களின் தொடர்ச்சியாக இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் இலங்கைக்கான ஒட்டுமொத்த அபிவிருத்தி திட்டங்களுக்காக இதுவரையில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டிருக்கும் அதேசமயம் இதில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் முழுமையான நன்கொடை திட்டமாக வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி, வீடமைப்புத்திட்டம், திறன் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, தொழில் பயிற்சி ஆகிய துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியவாறு இலங்கை முழுவதிலும் மக்களை இலக்காகக் கொண்ட 70க்கும் அதிகமான அபிவிருத்தி திட்டங்கள் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் 20 திட்டங்கள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களாகும்
4.அண்மையில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் மேலதிக அபிவிருத்தி பங்குடைமை ஒத்துழைப்பு திட்டங்களுக்கான சாத்தியங்கள் தொடர்பாக இலங்கை தலைமைத்துவத்துடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த அவர், “சமூக மற்றும் மனிதவள துறைகள் சார்ந்த விடயங்களில் இலங்கையின் ஒரு சிறந்த அபிவிருத்தி பங்காளர் என்ற பதிவினை இந்தியா கொண்டுள்ளது. குறிப்பாக பாரிய வீடமைப்புத் திட்டங்களாக இருந்தாலும் சரி இல்லாவிடில் அம்புலன்ஸ் சேவைகளாக இருந்தாலும் சரி எமது பங்குடைமையானது இத்தீவில் வாழும் மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. எமது கடன் ஒதுக்கீடுகள் மூலம் இயல்புநிலை மீளக்கட்டி எழுப்பப்பட்டு தொடர்புகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் தொழில்நுட்பம், கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி, மற்றும் நகர அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் செயற்பட்டு வருகின்றோம். அத்துடன் குறிப்பாக கௌரவ ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை அரசாங்கம், தொழில் பயிற்சி நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதனை எம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது எமது எதிர்கால நடவடிக்கைகளில் இவ்வாறான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என குறிப்பிட்டிருந்தார்.
5.அலரிமாளிகையில் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் 2020 நவம்பர் பத்தாம் திகதி உயர் தாக்கங்களை கொண்ட சமூக அபிவிருத்தி திட்டங்களை இந்திய நிதி உதவிகளின் கீழ் அமுல்படுத்துவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தமையை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகிறோம். தற்போது நடைமுறையில் இருக்கும் உயர் தாக்கங்களை உடைய சமூக அபிவிருத்தி திட்டங்கள் மீதான புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேலும் ஐந்து வருடங்கள் நீடிப்பதற்கு இலங்கை பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் 2020 செப்டம்பர் 26ஆம் திகதி நடைபெற்றிருந்த மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது இணக்கம் காணப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டது