நெடுந்தீவுக்கு வடமேற்கே இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் மூழ்கடித்துள்ளனர்.
நெடுந்தீவில் இருந்து 8 கடல்மைல் தொலைவில், நேற்றிரவு அத்துமீறி மீன்பிடித்த 50இற்கும் அதிகமான இந்திய மீன்பிடிப் படகுகளை சிறிலங்கா கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு தடுத்து நிறுத்த முற்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு மீன்பிடிப் படகை கைப்பற்ற முனைந்த போது, இந்திய மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, தமது படகினால், கடற்படைப் படகின் மீது மோதியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, நிலைதடுமாறி, மீன்பிடிப்படகு கடலில் மூழ்கியதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.
இதையடுத்து, நேற்றிரவு குறித்த பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினர் தேடுதல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
எனினும், அந்த மீன்பிடிப் படகில் எத்தனை பேர் இருந்தனர் என்றோ, அவர்களின் நிலை என்னவாயிற்று என்றோ தெரியவில்லை என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பக்கவாட்டுப் பகுதியில் சேதமடைந்த சிறிலங்கா கடற்படை அதிவேக தாக்குதல் படகு, காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.