இந்திய அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுத உபகரணங்களின் உயர் வினைத்திறனை மேலும் உறுதிப்படுத்தும் இந்தியாவின் உறுதிப்பாட்டின் ஓர் அங்கமான பராமரிப்பு பணிகளிலொன்றாக, 2011 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட நான்கு கண்காணிப்பு ராடர்களான INDRA Mk-II ராடர்களின் பராமரிப்பு பணிகளுக்காக 200 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 341 இந்த்ரா ராடர் உதிரிப்பாகங்களுடன் இந்திய விமானப்படைக்கு சொந்தமான An-32 விமானம் 2021 ஜனவரி 10 ஆம் திகதியன்று பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
கட்டுநாயக்காவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையின் முகாமில் இலங்கை விமானப் படையினால் ஏற்பாடு செய்யப்பட பாரிய நிகழ்வொன்றில் இந்த உதிரிப்பாகங்கள் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரண அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்த உதிரிப்பாகங்கள் குறித்த ராடர்களின் வினைத்திறனை உறுதிசெய்து, இலங்கை விமானப்படைக்கு முக்கிய தேவையாக கருதப்படும் இச்சேவையினை வழங்குவதற்கு வழிசமைப்பதாக அமைகின்றது.
இந்தியாவின் இலக்கான பிராந்தியத்தில் அனைவருக்கும் அபிவிருத்தியும் பாதுகாப்பும் என்ற சாகர் கோட்பாட்டினை புரிந்துணர்வதற்காக இலங்கை பாதுகாப்புப் படையினரின் ஆளுமை விருத்தி மற்றும் உயர் மட்ட செயல் திறனை உறுதி செய்வதில் இந்திய பாதுகாப்புப் படைகள் உறுதியுடன் உள்ளன. இந்த்ரா எம்.கேII ரக ராடார்கள் மொபைல் 2டி ராடார் வகையை சார்ந்ததாக இருக்கும் அதேவேளை தாழ்வாக பறக்கும் விமானங்களை இலகுவில் அடையாளம் காணக்கூடியவை.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி டிஆர்டிஓ)) அமைப்பின் இலத்திரனியல் மற்றும் ராடார் அபிவிருத்தி ஸ்தாபனம் (எல்ஆர்டிஇ) இதை உருவாக்கியது. M / s பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ராடார்கள் இலங்கை விமானப் படையின் கண்காணிப்பு திறனில் மிகமுக்கியமான வகிபாகத்தை கொண்டுள்ளன. இந்தியாவின் நட்பு அடிப்படையிலான இந்த ஆதரவின் அடிப்படையில் இலங்கை விமானப் படையின் 100 வீதமான செயல்திறனை உறுதிசெய்ய முடிகின்றது. இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் இந்திய பாதுகாப்புத் துறையின் தயாரிப்புக்களின் நம்பகத்தன்மைக்கு சான்றாகும்.
இலங்கை விமானப்படையினர் வசம் உள்ள தரையிலிருந்து ஆகாயத்தை நோக்கி ஏவப்படும் 54 IGLA ஏவுகணைகளின் வருடாந்த பராமரிப்பு பணிகளின் வெற்றிகரமான நிறைவினை குறிப்பிடுவதாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் IGLA ஏவுகணை அமைப்புக்கள் இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து அந்த ஏவுகணைகளை பொருத்துவதற்கானதும் பராமரிப்பதற்கானதுமான பயிற்சிகள் இந்திய விமானப் படையின் பயிற்சி குழுவினரால் இலங்கை விமானப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் IGLA ஏவுகணை தொடர்பான பல்வேறு சிறப்பு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்த ஏவுகணைகளின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் வருடாந்தம் இவ்வாறான பராமரிப்பு பணிகள் இந்திய விமானப் படையினரால் நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறித்த ஏவுகணைகளை வான் மார்க்கமாக கொண்டு செல்லுதல், பராமரிப்பு பணிகள் மற்றும் அவற்றினை மீண்டும் உரிய இடத்திற்கு சேர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான அனைத்து செலவீனங்களையும் இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்பு ரீதியிலான உறவுகளின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்கின்றது.
2020 நவம்பரில் இலங்கையால் நடத்தப்பட்ட இந்தியா இலங்கை மற்றும் மாலைதீவு இடையிலான முத்தரப்பு கடல் பாதுகாப்பு மாநாட்டின் போது இலங்கையின் பாதுகாப்புத்துறை சார் மேம்பாட்டுக்கான இந்தியாவின் முழுமையான ஆதரவுக்கான உறுதிமொழி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் அவர்களால் இலங்கை தலைமைத்துவத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்துவரும் ஒத்துழைப்பு, தோழமை மற்றும் நட்புறவு ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக இந்த IGLA ஏவுகணைகளின் துரித பராமரிப்பு பணிகள் மற்றும் உதிரிப்பாகங்களின் மீளமைப்பு ஆகியவை அமையும் அதேநேரம் முன்னுரிமைக்குரிய முதல் பங்காளராக இலங்கையை இந்தியா கருதுவதையும் இதன் மூலம் காணமுடியும்.