இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிந்துள்ள போதும், அதனை சிங்கள மக்களிடம் கூறுவதற்கு அவர் தயங்குகின்றார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரித்தார். அதேவேளை தீர்வுத் திட்டங்கள் என்ன என்பதனை அவர் ஏற்கனவே அறிந்துள்ளதால் தாம் அவருடன் புதிதாக பேசுவதற்கு எதுவும் இல்லை என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மாவீரர் வாரத்தின் முதல்நாளாக இன்று அமைந்துள்ளது. இந்த நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிடம் நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா? என்று கேட்கின்ற போது, இதற்கான விடையாக இல்லை என்பதனை நான் கூறுகின்றேன்.
சுதந்திரம் மற்றும் தனித் தாயகம் என்பதனை அடிப்படையாகக் கொண்டே அங்கு போராட்டம் நடந்தது. ஆனால் இந்த போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் சுதந்திரம் கேள்விக்குறியானது. யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்தும் அந்த மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இன்று அவர்கள் மோசமான நிலைமையிலேயே இருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் பொதுவாக சிந்தித்தால் நாடு அபிவிருத்தியடைந்திருக்க வேண்டும்.
நாடு முன்னேற்றத்தை கண்டிருக்க வேண்டும். ஆனால் யுத்தம் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது இருந்த நிலைமையை விடவும் மோசமான நிலைமையிலேயே தற்போது நாங்கள் இருக்கின்றோம். இதனால் எங்கேயோ பாரிய தவறு நடைபெற்றுள்ளது. இந்த சிஸ்டம் தொடர்பில் நாங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாகவில்லை. கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியை பெற்றுக்கொள்ளும் போதே, அதற்கு முன்னரே பொருளாதார நெருக்கடி ஆரம்பிக்கப்படவில்லை. பெரும்பான்மை வாத அரசியல் மற்றும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று சிந்தித்த போதும் மற்றும் நாட்டில் உள்ள மற்றையவர்களை வித்தியாசமான மறையில் அனுகிய போதும்தான் இந்த நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் இடையே தொடர்பு இல்லை என்பது தெளிவாகின்றது. இங்கே எதிராளிகளாக எங்களை காட்டியுள்ளீர்கள். நீங்கள் இனவாதத்தை மேன்படுத்தி நாட்டை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளீர்கள்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீது பாரபட்சம் காட்டப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் அதிருப்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால்தான் அவர்கள் சுதந்திரத்தை எதிர்பார்த்தனர். இப்போது மீண்டும் உங்களின் இயலாமையினால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் இரண்டு மடங்கு பிரச்சினைக்குள் சிக்கியுள்ளனர். இதனால் தனி நாடுதான் தீர்வாக அமையும் என்ந சிந்தனைக்கு அவர்கள் வந்துள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி அனுபவம் வாய்ந்தவர் அவருக்கு சமஷ்டி தொடர்பில் தெரியும். அதுவே தீர்வு என்றும், அதன்மூலம் நாடு சுபீட்சம் அடையும் என்றும் தெரியும். பாதுகாப்புக்கான செலவுகளை குறைக்க முடியும் என்றும் தெரியும். ஆனால் அதனை சிங்கள மக்கள் மத்தியில் கூறுவதற்கு அவர் தயங்குகின்றார். சமஷ்டி என்பது தனிநாடோ, அதற்கு முரணானதே அல்ல. நாட்டை ஒருங்கிணைப்பதற்கானதாக இருக்கின்றது. பிரித்தானியா காலத்தில் பிரிந்திருந்த நாடுகளை இணைப்பதற்கானதாக இருந்தது.
அதுமட்டுமன்றி இந்த சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் காரணம். இலங்கை இப்போது படுபாதாளத்திற்கு சென்றுள்ளது. ஜனாதிபதி தோல்வியடைந்தவராகவே இருக்கின்றார். அவர் தனது அரசியல் வாழ்வின் இறுதிக் காலத்திலாவது புதிய ஆரம்பத்திற்கான அடித்தளத்தை ஏன் ஏற்படுத்த முடியாது என்று கேட்கின்றேன்.
ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதியுடன் புதிதாக நாங்கள் கதைப்பதற்கு எதுமில்லை. இதற்கான தீர்வு என்ன என்பதும் அவருக்கு தெரியும். ஆகக் குறைந்தது சிங்கள மக்களுக்காவது அவர் நேர்மையாக இருக்க வேண்டும். சமஷ்டியின் அடிப்படைகளை கூற முடியும். அவ்வாறு செய்யும் போதே தேவையற்ற செலவுகளை குறைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று எதிர்கால சந்ததியினரின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும்.