அசாதாரண சூழ்நிலை காரணமாக இரணைதீவிலிருந்து வெளியேறி மீண்டும் அங்கு குடியேறியுள்ள பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 19.௦1.2௦21 அன்று முற்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் பிரதிநிதி, ஆளுநரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட செயலாளர், இரணைதீவு பிரதேச செயலாளர், கடற்படை உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் மற்றும் குறித்த பிரதேச மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் தற்போது இரணைதீவு, இரணைமாதா நகர் ஆகிய இடங்களுக்கு சென்று குடியேறிய மக்கள் வெளி இடங்களுக்கு சென்று வரும்போது கடற்படையினரால் ஏற்படுத்தப்படும் தடைகள், இரணைதீவிற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநபர்கள் சென்று வருவதற்கான சுதந்திரம், பொதுமக்கள் சொந்த தேவைக்கான பொருட்களை கொண்டுசெல்வதற்கான அனுமதி, மின்சாரம், மலசலகூட வசதிகள் பெற்றுக்கொடுத்தல், மற்றும் அரச சேவைகளை இரணைதீவிலேயே பெற்றுக்கொடுக்க வசதியளித்தல் போன்ற மக்களின் பிரச்சனைகள் இலங்கை கடற்படையினருடன் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பொது மக்களால் முன்வைக்கபட்ட போக்குவரத்து பிரச்சனை, அபிவிருத்தித் திட்டங்களை இரணைதீவு மக்களுக்கு பெற்றுக்கொடுத்து, கால்நடைகளை (மாடுகளை) கட்டுப்படுத்தல், குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் (மண்அகழ்வு, காணிஅபகரிப்பு) முன்வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், குறித்த பிரதேசத்துக்குரிய பிரதேச செயலர், உரிய கிராம அலுவலரை நியமித்து காவல்துறையினருடன் இணைந்து சட்டவிரோத செயல்களை உடனடியாக கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டதுடன் அனைத்து பொது மக்களின் பிரச்சனைகளுக்கும் தேவையான வழிவகைகளை ஏற்பாடு செய்ய உரிய தரப்பினருக்கு பணிக்கப்பட்டது.