இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இணைந்துள்ள கிறிஸ் கேல், மூன்றாவது இருபது 20 உலகக் கிண்ணத்தை வென்றெடுக்க குறிவைத்துள்ளார்.
இந்தியாவில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக தான் எந்தப் பாத்திரத்தையும் (துடுப்பாட்ட நிலை) ஏற்கத் தயார் என கேல் கூறியுள்ளார்.
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 41 வயதான கேல், ஆரம்ப வீரராக விளையாடியுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி சார்பாக 3 ஆம் இலக்க வீரராக கேல் அசத்தியிருந்தார். 9 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 395 ஓட்டங்களைப் பெற்ற கேலின் சராசரி 43.88 ஆக இருந்ததுடன் அவரது ஸ்ட்ரைக் ரேட் 144.16ஆக அமைந்திருந்தது.
இலங்கைக்கு எதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் திங்களன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கேல், கீரன் பொலார்டும், பில் சிமன்ஸும் எந்த இடத்தில் தன்னை துடுப்பெடுத்தாட அழைக்கின்றார்களே அந்த இடத்தில் துடுப்பெடுத்தாடுவதை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகக் கூறினார்.
உலகிலேயே அதிசிறந்த வீரராக வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் அவர் குறிப்பிட்டார்.
14 வீரர்களைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் குழாத்தில் இடம்பெறும் நான்கு ஆரம்ப வீரர்களில் கிறிஸ் கேலும் ஒருவராவார். அவரை விட எவின் லூயிஸ், லெண்ட்ல் சிமன்ஸ், அண்ட்ரே ப்ளெச்சர் ஆகியோரும் ஆரம்ப வீரர்களாக குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
‘தற்போது நான் மூன்றாவது இலக்கத்தில் சிறப்பு துடுப்பாட்ட வீரராக இருப்பதை உணர்கின்றேன். பயிற்றுநர் அணில் கும்ப்லே இந்தப் பாத்திரத்தை ஏற்று விளையாடுமாறு என்னைக் கோரினார். ஐபிஎல் ஆரம்பமாவதற்கு முன்னரே இக் கோரிக்கையை அவர் (அணில் கும்ப்ளே) விடுத்திருந்தார். எனக்கு கிடைத்த மூன்றாம் இலக்க வாய்ப்பில் எனக்கு எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. எனது அனுபவத்தை 3ஆம் இலக்கத்தில் பகிரவேண்டும் என அவர்கள் விரும்பினர். மயான்க் அகர்வால், கே. எல். ராகுல் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக பிரகாசித்ததால் எனக்கு சுலபமாக இருந்தது’ என்றார் கேல்.