இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் 48 கிலோமீற்றர் நீளமுள்ள இராமர் பாலத்தின் தோற்றம் தொடர்பான விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
இராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள இப்பாலம் சுண்ணாம்பு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளதோடு பல வரலாற்று மர்மங்களையும் கொண்டதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக, இலங்கையை வராற்றுக்காலத்தில் ஆண்ட அரசன் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை இராமர் மீட்கச் சென்றபோது கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டது என்றும் இராமருக்காக வானர படையினர் அந்த பாலத்தை கட்டியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன
இந்நிலையில், இந்துக்களின் அடையாளமாகவும் நம்பிக்கை சார்ந்த விடயமாகவும் இந்த இராமர் பாலம் காணப்படுவதன் காரணமாக, இதனை இந்தியாவின் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பாராதீய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இராமர் பாலம் எப்போது உருவானது எப்படி உருவானது என்பது குறித்த தொல்லியல் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கீழ் உள்ள தொல்பொருளியல் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.