எதிர்காலத்தில் இலங்கைக்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது பாகிஸ்தானிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதிக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார்.
இருதரப்பு வர்த்தகம், முதலீடுகள் மற்றும் வணிக ஒத்துழைப்பு உட்பட வலுவான பொருளாதார கூட்டாட்சியை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை பிரதமர் இம்ரான் கான் இதன்போது சுட்டிக்காட்டினார்.
விவசாயம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, கல்வி மற்றும் கலாசாரம் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் பின்னர் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது என கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.