ஜனநாயக நிறுவனங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கடினமான முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், கடந்த கால குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர்கள், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள், சிறிலங்காவுக்கு மேற்கொண்ட 10 பயணங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 400 பரிந்துரைகள் வரை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
நாட்டில் சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளைத் தொடரவும், கடந்த காலகுற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் மனித உரிமைகள் பேரவையிடம் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல், குடியியல் வெளி குறைக்கப்படுதல், மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிறுவனமய பாதுகாப்புகள் இல்லாமல் ஆக்கப்படுதல், உள்ளிட்ட, போக்குகளை கண்டு தாங்கள் திகைப்படைந்துள்ளதாகவும், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களை அச்சுறுத்தும் வகையிலான, அரசாங்கத்தின் பெரும்பான்மையின சொல்லாட்சி அதிகரித்து வருவது குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொரோனா மற்றும் ஈஸ்டர் தாக்குதல் நெருக்கடிகளுக்கு தேசிய பாதுகாப்பை மையமாக கொண்டு பதிலளிப்பது மற்றும் போர்க்குற்றங்களில் சிக்கியதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்தி, சிவில் செயற்பாடுகளை இராணுவ மயமாக்கும் தீவிர போக்கு ஆபத்தானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொரோனா தொற்றின் போது, கருத்துச் சுதந்திரம், அமைதியாக ஒன்று கூடும் உரிமைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், என்றும் ஐநா சிறப்பு அறிக்கையாளர்கள், குறிப்பிட்டுள்ளனர்.
2019 முதல், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டவாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எதிராக, பாதுகாப்பு பிரிவினர் கண்காணிப்பு, துன்புறுத்தல், மற்றும் அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.