இலங்கையில் கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது என்று கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடுஇ கொரோனா பரிசோதனைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் அதிகரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இந்நிலைமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் சுகாதாரச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 40 சிறுவர்கள் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இது ஒப்பீட்டளவில் அதிகரிப்பு எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் 75 புதிய ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற 180 மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே இந்த 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.