மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இலங்கை அணியின் புதிய தலைவராக சகலதுறை வீரர் தசுன் ஷானக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அணியின் வழமையான அணித் தலைவராக இருந்த லசித் மாலிங்க, கடந்த சில மாதங்களாக பயிற்சிகளில் ஈடுபடாததாலும் அணித் தேர்வுக்கு அவர் கருத்தில் கொள்ளப்படாததாலும் தசுன் ஷானக்கவிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக 2019 இல் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின்போது தசுன் ஷானக்க அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்ததுடன் அத்தொடரில் இலங்கைக்கு 3 – 0 என்ற முழுமையான வெற்றியை அவர் ஈட்டிக்கொடுத்திருந்தார்.
மேற்கிந்தயத் தீவுகளுக்கு இன்று புறப்பட்டுச் செல்லும் இலங்கை அணி அங்கு மூவகை சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களுக்கு 20 வீரர்களைக் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
சுழல்பந்துவீச்சாளர் அக்கில தனஞ்சய 2019 செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னர் மீண்டும் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.
அவரது பந்துவீச்சுப் பாணி விதிகளை மீறும்வகையில் இருந்ததால் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஒரு வருடத் தடைக்குள்ளாகியிருந்தார். கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் அவரது தடை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இருபது 20 கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததும் சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் ஆகியவற்றின்போது அணித் தலைமைப் பொறுப்பை திமுத் கருணாரட்ன ஏற்பார்.
இலங்கை ஒருநாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் குழாம்: திமுத் கருணாரட்ன (ஒருநாள் அணித் தலைவர்), தசுன் ஷானக்க (இருவது 20 அணித் தலைவர்), தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, அஷேன் பண்டார, ஓஷத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், நிரோஷன் திக்வெல்ல, திசர பெரேரா, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், நுவன் ப்ரதிப், அசித்த பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, அக்கில தனஞ்சுய, லக்ஷான் சந்தகான், டில்ஷான் மதுஷன்க, சுரங்க லக்மால்.