கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக செயற்படுவதற்கு ராஜபக்ஷவினரின் அரசாங்கம் மறுதலிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டமைக்கு சீனா தொழிற்சங்கங்களின் வழியாக பின்னணியில் இருந்து செயற்பட்டமையே காரணமாகும் என இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் தெரித்தார்.
கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையமானது இந்தியா, ஜப்பான் கூட்டில் பொது-தனியார் அபிவிருத்தி முயற்சிக்கு கையளிக்கப்படாது என்று பிரதமர் மஹிந்தராஜாபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் பகிரங்கமாக அறிவித்துள்ளமை தொடர்பில்லும் அதன் எதிர்கால விளைவுகள் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் சம்பந்தமாக அவர் தெரிவுத்துள்ள கருத்துக்கள் வருமாறு,
நட்புறவு பாதிப்பு
இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் விரிவாக்கப் பணியை முன்னெடுப்பதற்கான இந்திய, ஜப்பான் கூட்டு முயற்சியின் உதவியை நிராகரித்து சுயமாகவே செய்வதாக முடிவெடுத்திருப்பது இலங்கையின் நீண்டநாள் நட்பு நாடான இந்தியாவுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதில் ஐயமில்லை.
ஆளுமைக் குறைபாடு
இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்திய-ஜப்பான் உதவியுடன் தான் கிழக்கு முனையத்தின் விரிவாக்க முயற்சியை, இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், முன்னெடுப்பதற்கு உத்தேசித்து இருப்பதாக இலங்கை துறைமுக தொழிற்சங்க தலைவர்களுடனான சந்திப்பின்போது கூறியிருந்தார்.
ஆனாலும் ஆளும் கட்சியினது அரசியல் காரணங்களுக்காக கிழக்கு முனையத்தினை ஏற்கனவே கூறியவாறு வழங்க முடியாது என்று எடுத்துள்ள அந்த முடிவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கட்சியின் மீதுள்ள ஆளுமைக் குறைவை காட்டுகிறது. ஜனாதிபதியின் இந்த குறைபாட்டை இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் நன்கு புரிந்து கொண்டிருக்கும். ஆகவே, அவை நேரடியாக ஜனாதிபதி மீது அழுத்தம் காட்ட மாட்டார்கள் என்பது என் அனுமானமானமாகவுள்ளது. ஏனெனில், ஜனாதிபதி ஏற்கனவே இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை அரசாங்கம் எந்த வகையிலும் உதவாது என்பதை பல தடவைகளில் கூறியுள்ளமையினாலாகும்.
பின்னணியில் சீனா
இலங்கை அரசாங்கத்தின் முடிவு மாற்றப்பட்மைக்கு, சீனாவே சூத்திரதாரியாக உள்ளது. அது இலங்கை தொழிற்சங்களின் வழியாக செயல்பட்டுள்ளது. இதில் எவ்விதமான ஐயங்களுமில்லை.
ஆஸி., அமெரிக்கா ஆகியவற்றுக்கும் பாதிப்பு
கிழக்கு முனையம் உடன்படிக்கையின் பிரகாரம் வழங்கப்படாமையானது இந்தியா, ஜப்பான் ஆகியவற்றுக்கு மட்டுமல்லாது இந்திய – பசுபிக் பாதுகாப்பு அமைப்பில் உள்ள அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கும் கவலை தரும் விடயமாகும். ஏனெனில், இந்த இரண்டு நாடுகளும் இலங்கைத் துறைமுகத்தை அதிகமாக உபயோகிக்கும் நாடுகளில் முக்கியமானவையாக உள்ளன. ஆகவே, இலங்கை அரசாங்கத்தின் இந்த முரண்நகை முடிவால் ஏற்படும் எதிர் விளைவுகளை அந்நாடுகளின் கடல்சார் வணிக ரீதியான விடயங்களின் மூலம் எதிர்காலத்தில் முகங்கொடுக்க நேரலாம்.
தமிழகத்தில் தாக்கம்
இலங்கை எடுத்துள்ள இந்திய எதிர்மறை முடிவானது நெருங்கி வரும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பு அரசியலுக்கு அதிகமாக உபயோகப்படும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டு தேர்தலில் கூட்டணி அரசியலில் பா.ஜ.க. தன்னை வலிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நேரத்தில், இலங்கையின் இந்த முடிவானது தனிப்பட்ட வகையில் அக்கட்சிக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
ஐ.நா.வில் எதிரொலி
தமிழகத்தில் அவ்விதமாக நிலைமைகள் ஏற்படுகின்றபோது இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய மீதான நம்பிக்கையைக் குலைக்கும். அவ்விதமான நிலைமையானது ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள இலங்கை ஐ.நா. மனித உரிமை பேரவையில் எதிரொலிக்கும். ஆகவே நிலைமைகளை முகங்கொடுப்பதற்கு இலங்கை தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் அவ்விதமான நிலைமைகள் ஏற்படுகின்றபோது இந்திய-இலங்கை உறவுகளில் காழ்ப்புணர்ச்சிகள் ஏற்படலாம்.
மேற்கு முனையம்
இலங்கை, இந்திய, ஜப்பான் கூட்டணிக்கு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைத்தினை பெற்றுக்கொள்ளுமாறு ராஜபக்ஷவினர் விடுத்துள்ள அழைப்பை, நான் ஆராய்வதற்கு முயற்சிக்கவில்லை. ஏனெனில், அது இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு மரியாதை கொடுப்பதற்காக உபயோகிக்கப்பட்ட உத்தியாகவே கருதுகின்றேன். அது வெறுமனே வாய் பேச்சு என்றே கருதுகிறேன். அதற்கு என்ன எதிர்ப்புகளை சீனா எதிராக எவ்வாறான எதிர்ப்புக்களை கிளப்பிவிடும், என்பது இலங்கை அரசியல் தலைமைக்கே தெரியாதுள்ளது என்றார்.
நன்றி: வீரகேசரி