*121 புரிந்துணர்வு உடன்படிக்கைகள், 19 தொழில்நுட்ப பரிமாற்றங்கள், 4 கையளிப்புக்கள் மற்றும் 18 உற்பத்திப் பொருட்களின் அறிமுகம் ஆகியவற்றுடன் கொவிட்19 சவால்களுக்கு மத்தியிலும் ஏரோ இந்தியா (மெய்நிகர்) 2021 கலப்பு வடிவிலான மாநாடானது முன்னொருபோதும் இல்லாத வெற்றியை பதிவு செய்துள்ளது. கலப்பு வடிவத்தில் நடைபெற்றிருந்த உலகின் முதலாவது பாரிய நிகழ்வான ஏரோ இந்தியா 203 கோடி ரூபா பெறுமதியான முற்பதிவுகளை 45 நுண்,சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து பெற்றிருப்பது பாரிய வெற்றியாகும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஏரோ இந்தியா மாநாட்டில் நேரடியாக 16000 பேரும் மெய்நிகர் மார்க்கங்கள் ஊடாக 5 லட்சம் பேரும் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் 55 வெளிநாடுகளை சேர்ந்த 84 நிறுவனங்கள் உள்ளடங்கலாக 540 கம்பனிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
*இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் இலக்குகளை இந்த நிகழ்வு புதியதொரு மட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. இலகு ரக தாக்குதல் விமானம் (தேஜாஸ்), கடல் மார்க்கமான ரோந்து விமானம் டிஓ-228, நவீன ரக ஹெலிகொப்டர் (துருவ்), இலகு ரக தாக்குதல் ஹெலிகொப்டர், இலகு ரக பயன்பாட்டு ஹெலிகொப்டர் ஆகியவற்றின் கண்காட்சிகள், “சரங்” மற்றும் “சூர்ய கிரன்ஸ்” ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கண்காட்சிகள் போன்றவை பெங்களூருவில் இந்நிகழ்வினை பார்வையிடுவதற்காக வருகை தந்தவர்களை மெய்மறக்கச்செய்திருந்தது.
*இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் வர்த்தக சமூகங்கள் ஆகியவற்றின் நலன்களுக்காக ஏரோ இந்தியா கண்காட்சியை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மெய்நிகர் மார்க்கமாக ஒழுங்கு செய்திருந்தது. மூன்று நாட்களாக இந்த நிகழ்வு நடைபெற்றிருந்ததுடன் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) டாக்டர் சரத் வீரசேகர, பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் (ஓய்வு) ஜயந்த கொலம்பகே ஆகியோர் இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு செயலமர்வுகளில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
*இந்து சமுத்திர பிராந்திய மூலோபாய ஆதாயங்களுக்கான வான் வலு, சாகர் கோட்பாட்டை நோக்கிய கூட்டு கடல்சார் திறனை உருவாக்குதல் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பான மற்றும் தூய்மையான கடல்களுக்கான கூட்டு அணுகுமுறை போன்ற பொதுவான பாதுகாப்பு கவலைகள் குறித்த சமகால தலைப்புகள் குறித்து ஆராயப்பட்டது. பாதுகாப்புப் படை பிரதானி/ இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி மற்றும் கடலோர காவல்படை பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பிரமுகர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.
கௌரவ விருந்தினர்கள் தங்கள் உரைகளின்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பின் வலுவான பிணைப்புகள், கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கான இந்தியாவின் தொடர்ச்சியான உதவி, பாதுகாப்புப் படைகளின் திறன் / திறன் மேம்பாடு மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பல்வேறு பேரழிவுகளுக்கு முன்கூட்டியே பதிலளித்தல் ஆகிய விடயங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் கடல் தொடர்பு, SAR மற்றும் நாடுகடந்த குற்றங்களை எதிர்கொள்வதற்கான நாடுகளின் கூட்டு பொறுப்பு ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான இருப்பு குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. எம்டி நியூ டயமண்ட் தீ விபத்தை முறியடிப்பதற்கு சாகர் ஆரக்ஷா திட்டத்தை முன்னெடுத்தமை, தோஸ்டியாண்ட் கூட்டுப் பயிற்சி ஆகியவற்றின்போது பெறப்பட்ட நெருக்கமான ஒத்துழைப்பு போன்றவை கௌரவ விருந்தினரால் மிகவும் பாராட்டப்பட்டது.
*இந்நிகழ்ச்சியில் வதிவிட பாதுகாப்பு ஆலோசகர்கள், பாதுகாப்பு மற்றும் உள்ளூர் வணிக சமூகத்தைச் சேர்ந்த 120 பேர் கலந்து கொண்டனர். மேலும், இந்தியாவின் பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானி அட்மிரல் (ஓய்வு) ரவீந்திர விஜேகுணரத்த்ன உட்பட இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு மூத்த அதிகாரிகள் நெரடியாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இலங்கையின் தீவிர பங்களிப்பானது நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பையும், இந்திய உற்பத்தி மீதான பாதுகாப்பு சார் தயாரிப்புகளில் மிகுந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தியது.