கொழும்பிலிருந்து – சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த எம்.எஸ்.சி. மெஸ்சினா என்ற சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்ட்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்பிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த எம்.எஸ்.சி.மெஸ்சினா சரக்கு கப்பலின் இயந்திரப் பகுதியில் நேற்று (24) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரை விளக்கத்திலிருந்து 480 கடல்மைல் தொலைவில் வைத்தே கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, எம்.எஸ்.சி.மெஸ்சினா கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் தொடர்பில், அந்த கடல்மார்க்கமாக பயணிக்கும் ஏனைய சரக்குக் கப்பல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எம்.எஸ்.சி.மெஸ்சினா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் உதவிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தீப்பரவல் ஏற்பட்டுள்ள கப்பலில் உள்ளவர்களுக்கு தேவையான ஏனைய வசதிகளையும் செய்துக் கொடுக்குமாறு அங்குள்ள, சரக்கு கப்பலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கப்பல் தொடர்பில் தற்போது வரையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவலுக்கமைய தீப்பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.