இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் (கோப்) குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த கால ஒளிபரப்பு அலைவரிசை விவகாரங்கள் மற்றும் உள்ளக அறிக்கை விடயங்களுக்காக இதற்கு முன்னரும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
தற்போது கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், பதவி விலகல்கள் மற்றும் தெரிவுக்குழு விடயங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்கொண்டுள்ள சிக்கல்களுக்கு மத்தியில் கோப் குழுவினால் அந் நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெப்ரவரி 12 ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோப் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதுடன், இலங்கையில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விசேட ஆய்வு அறிக்கை பரிசீலிக்கப்படவுள்ளது.
கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீள் குடியேற்றும் வேலைத்திட்டத்தின் முன்னேற்ற பகுப்பாய்வு பெப்ரவரி 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு பிளாஸ்டிக் இறக்குமதி செய்வதை முகாமை செய்தல் மற்றும் இலங்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விசேட ஆய்வு அறிக்கை பெப்ரவரி 26 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.