சகிப்புதன்மையும் வன்முறை மனக்கசப்பு பாதுகாப்பின்மை ஆகியவற்றிற்கான விளைவு இறுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு வித்திடலாம் என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், சட்டத்தின் ஆட்சி மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கான மரியாதைகள் ஆகியவை பரஸ்பரவ வலுவூட்டும் நோக்கங்களாகும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான எமது நடவடிக்கைளின் போது அப்பாவி மக்கள் பாதிக்கப்டாமலிருப்பது பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கான முயற்சிகளில் ஒரு முக்கிய அங்கமாகயிருக்கவேண்டும்.
தனியுரிமைக்கான உரிமைகள் சிந்தனை சுதந்திரம், குற்றமற்றவர் என கருதப்படுவது, நியாயமான விசாரணை ,அரசியலில் பங்கேற்பு, கருத்துசுதந்திரம், பங்கேற்பதற்கான உரிமை போன்றவற்றை ஒடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் அளவுக்கதிகமான நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடமுடியாது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அவசியமான உறுதியான மனிதஉரிமை கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு மனித உரிமை நியமங்களிற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள யதார்த்;தத்திற்கும் இடையில் காணப்படும் இடைவெளியை குறைக்க முயலவேண்டும்.
இனவாதமும் சகிப்புதன்மையும் வன்முறை மனக்கசப்பு பாதுகாப்பின்மை ஆகியவற்றிற்கான காரணங்களாக விளைவுகளாக அமைந்து இறுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு வித்திடலாம் என்பது பரந்துபட்ட அளவில் எற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.
பயங்கரவாதம் அநேக தருணங்களில் தீவிரவெறுப்பிலிருந்து உருவாகி மேலும் வெறுப்பிற்கு இட்டுச்செல்கின்றது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் எவருக்கும் அவர்களின் மனித உரிமைகளுடன் நியாயமான விசாரணையை வழங்குவதற்காக குற்றவியல் நீதி அமைப்பிலிருந்து பாகுபாடு அல்லது பாகுபாடு காட்டப்படுகின்றது எனக் கருதப்படும் நிலையை நீக்கவேண்டும்.
பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்அதேவேளை மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கை குற்றவியல் நீதி அமைப்பு முறையில் தீர்வை காணவேண்டிய சில விடயங்கள் உள்ளன.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த சட்ட கட்டமைப்பு குறித்து மீளாய்வு இடம்பெறவேண்டும். இதன் சட்டமூலம்,பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம், எஞ்சியுள்ள வழக்குகளிற்கு தீர்வை காணுதல் போன்றவற்றை குறித்தும் ஆராயவேண்டும்.
பயங்கரவாதத்திற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகள் கீழ் இடம்பெறும் மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காணுதல், பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு உரியநடைமுறையுடன கூடிய நியாயமான விசாரணையை வழங்குதல் அவசியமாகும் என்றார்.