இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 125 தமிழக விசைப்படகு உரிமையாளர்களுக்கு 5.66 கோடி ரூபா நிவாரணமும், பருவமழைக் காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 கோடி என மொத்தம் ரூ.11.32 கோடி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை ராமேசுவரம் மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் விடுதலை குறித்தும், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம் கோரியும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கை கடற் படையால் பறிமுதல் செய்யப் பட்டு தற்போது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் பொருட்டு, 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதமும், மொத்தம் ரூ.5.66 கோடி நிவாரணம் வழங்கப்படும்.
மேலும், வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களுக்கு ரூ.5.66 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.