இலங்கை அரசாங்கத்தின் கண்துடைப்பு நடவடிக்கையால் வெளிநாட்டு அரசாங்கங்கள் ஏமாந்துவிடாமல் உடனடியாக சர்வதேச நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிரிவு பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியை நிலைநாட்டும் விடயத்தில் இலங்கையின் அலட்சிய செயற்பாடுகள் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடுமையான அவதானத்தைப் பெற்றுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் மற்றுமொரு உள்ள விசாரணை ஆணைக்குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையில் ஆகக்குறைந்தபட்சம் 12 ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியிருக்கும் மீனாட்சி கங்குலி மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசத்தின் அழுத்தத்தை தணிக்கும் வகையிலேயே இவ்வாறான ஆணைக்குழுக்கள் கண்துடைப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு வழிவகுக்கவில்லை. காணாமல்போன உறவினரை தேடுவதற்கு அவர்தம் உறவினருக்கு உதவவில்லை.
அவர்கள் கண்டுபிடித்த விடயங்கள் அநேகமாக வெளிப்படுத்தப்படவில்லை. பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஐநா நிபுணர்கள் மனித உரிமைகளுக்கான ஐநா ஆணையாளர் ஆகியோர் இலங்கையின் நீதித்துறை நடைமுறையில் காணப்படும் பாரதூரமான குறைபாடுகளை அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.