கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல் தகனம் செய்வதை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையை மேற்கோள் காட்டியுள்ளமை தவறான செயற்பாடாகும்.
கொவிட்-19 வைரஸ் குறித்து உலக சுகாதார தாபனத்தின் தீர்மானங்களை ஏற்க முடியுமே தவிர ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை செயற்படுத்த முடியாது. உடல்கள் தகனம் செய்யப்படுவதில் எவ்வித மாற்றமும் கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல் தகனம் செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை .சுகாதார தரப்பினரே அத்தீர்மானத்தை எடுத்தார்கள். வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல் தகனம் செய்யலாம், அல்லது அடக்கம் செய்யலாம் என்ற தீர்மானத்தை உரிய நாடு அந்நாட்டின் பௌதீக காரணிகளை கொண்டு எடுக்கலாம் என உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யும் தீர்மானம் சுகாதார தரப்பினர் பல்வேறு மட்டங்களில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துடுத்துள்ளார்கள்.
கட்டாய தகனம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ள விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்விடயம் குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையை மேற்கோட்காட்டியுள்ளமை தவறாகும்.
கொவிட் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வதால் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படும் என்று குறிப்பிடுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
உயிரிழப்பவர்களின் உடல் தகனம் செய்யப்படும் என்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. பிற தரப்பினர் குறிப்பிடும் யோசனைகளை செயற்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை யார் பொறுப்பேற்பது? ஆகவே கொவிட்-19 விவகாரத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படாது. சுகாதார தரப்பினரது தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.