இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் காணாமல் போன நிலையில், 14 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் பனிப்பாறை உடைந்து உருகியதால் தவுளிகங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், அணை, நீர்மின் திட்ட கட்டமைப்புகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரைக் காணவில்லை.
மீட்பு பணி
பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.
உடைந்த அணையை ஒட்டியுள்ள சுரங்கங்களில் பலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று (07.02.2021) ஒரு சுரங்கத்தில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டனர். மற்றொரு சுரங்கத்தில் சுமார் 30 பேர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் சுமார் 300 வீரர்கள் ஈடுபட்டுள்னர்.
சுமார் 170 பேரை காணவில்லை என உள்ளூர் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஜோஷிமாத் பகுதியில் சிக்கி உள்ளவர்களை மீட்டு அழைத்து வருவதற்காக விமானப்படையின் ஹெலிகாப்டர்களின் மூலமாக இன்றும் மீட்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நன்றி :மாலைமலர்