உயர் கொள்கையுடை உண்மையான தலைவரை இழந்துவிட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவை ஒட்டி அவர் விடுத்துள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கும் ஒருவிடயமாகும். அவர் உண்மையாக ஒரு இலங்கையராக செயற்பட்டார். அத்துடன் அனைத்த இனங்களும் சமத்துவம், நீதி, கௌரவத்தின் அடிப்படையில் நல்லிணக்கத்தினைக் கொண்ட ஐக்கிய இலங்கை கட்டிடியெழுப்புவதற்காக பாடுபட்டார்.
அவ்விதமான தேசத்தினை செழிப்பானதாகவும், முன்னேற்றகரமான வழியிலும் கொண்டு செல்வதற்கு அவர் விரும்பினார். அதற்காக அவர் தனது வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அத்துடன் அவ்விதமான உயர்ந்த கொள்கையில் ஒருபோதும் பின்வாங்காது உறுதியாக இருந்தார்.
இவரது இறப்பால், உயர்ந்த கொள்கைகளை கொண்ட ஒரு தலைவரை இலங்கையின் அனைத்து தரப்பினரும் இழந்துள்ளனர்.
அவருக்கும் எனக்கும் இடையில் மிகுந்த நெருக்கமான தொடர்புகளும், உறவுகளும் காணப்பட்டன. அவருடைய இழப்பால் ஏற்பட்டிருக்கும் ஆழமான வெற்றிடத்தினை நிரப்புவது கடினமானது. அவருடைய இழப்பினால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றுள்ளது.