உயிரியல் பாதுகாப்பு குமிழி விதிகள் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் இணங்க மறுத்தமைக்காக தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தில் மொஹம்மத் ஹபீஸ் இணைக்கப்படவில்லை.
கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் மொஹம்மத் ஹபிஸ் ஆவார். கடந்த வருடம் 10 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஹபீஸ் 4 அரைச் சதங்களுடன் 415 ஓட்டங்களை மொத்தமாக பெற்று முதலிடத்தை வகித்தார்.
எனினும் உயிரியல் பாதுகாப்பு குமிழி விதிகளுக்கு ஹபீஸ் உடன்படாததன் காரணமாக தலைமை தெரிவாளர் மொஹமத் வசிம் பெயரிட்ட 20 வீரர்கள் அடங்கிய குழாத்தில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை.
அபு தாபி ரி 10 லீக் கிரிக்கெட் போட்டியில் தற்போது விளையாடிவரும் ஹபிஸ், பெப்ரவரி 5ஆம் திகதி குழாத்துடன் இணைவதற்கு அனுமதி கோரினார். ஆனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உடன்படவில்லை.
இவ்விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்படாததன் காரணமாக தென் ஆபிரிக்காவுடனான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் குழாத்தில் ஹபீஸ் இணைக்கப்படவில்லை.
‘ஒவ்வொரு வீரரும் பெப்ரவரி 3ஆம் திகதி உயிரியல் பாதுகாப்பு குமிழிக்குள் பிரவேசிக்கவேண்டும். இதற்கு யாரேனும் ஒரு வீரர் உடன்படாவிட்டால் அவர் குழாத்தில் இணையத் தயார் இல்லை என கருதப்படுவார்’ என மொஹம்மத் வசிம் தெரிவித்தார்.