2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
01/02/2021 அன்று முற்பகல் 11.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஆணைக் குழுவின் தலைவர் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வாவினால் இவ்வறிக்கை கையளிக்கப்பட்டது.
ஆணைக் குழுவின் இறுதி அறிக்கையானது சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளதாக அமைந்திருந்தது. இதன்போது நீதியரசர் ஜனக் டி சில்வாவிற்கு மேலதிகமாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பந்துல அத்தப்பத்து மற்றும் ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் மங்கலிக்கா அதிகாரி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவொன்று கடந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி இவ்வாணைக் குழு நியமிக்கப்பட்டது. அது முதல் கடந்த மார்ச் 20, செப்டம்பர் 20, டிசம்பர் 20 ஆம் திகதிகளில் அவ்வாணைக் குழுவின் பதவிக் காலம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 3 சந்தர்ப்பங்களில் முறையே 6 மாதங்கள், 3 மாதங்கள், ஒரு மாதம் என நீடிக்கப்பட்டு ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்றது.
இந்நிலையில் கடந்த 2019 ஆகஸ்ட் 31 ஆம் திகதி சாட்சி விசாரணைகளை ஆரம்பித்த ஆணைக் குழு, அன்று முதல் சம்பிரதாய இறுதி அமர்வு வரையில் 214 நாட்கள் கூடியது. அதன்படி 640 சந்த்ர்ப்பங்களில் 457 சாட்சியாளர்கள் சாட்சி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனைவிட, சாட்சி விசாரணைகளை நெறிப்படுத்திய சட்ட மா அதிபர் தரப்பினரால், எக்ஸ் என அடையாளப்படுத்தி 680 ஆவணங்களும், சி என அடையாளப்படுத்தி 1,556 ஆவணங்களுமக மொத்தமாக 2,236 ஆவணங்கள் உதவி சாட்சியங்களாக ஆணைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன.