பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்ததுடன் ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேரணி நிறைவுக்கு வந்தது
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி அம்பாறை பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான மக்கள் பேரணி 07/02/2021 மாலை யாழ்ப்பாணம் – பொலிகண்டியில் நிறைவுபெற்றுள்ளது.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் இறுதி நாள் பயணம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்று காலை ஆரம்பமானது.
மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என அதிகளவிலானவர்கள் பேரணியை ஆரம்பிப்பதற்காக கூடியிருந்தனர்.
இதன்போது பேரணிக்கான தடை உத்தரவை பொலிஸார் வழங்க முயன்றனர்.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து கரடிப்போக்கு வரை கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள உயர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கான தீர்வை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக, கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கும் இடத்தை பேரணி சென்றடைந்தபோது காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு நீதி கோரி கோஷம் எழுப்பப்பட்டது.
பரந்தன் நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டபோது, மாற்றுத்திறனாளிகளும் மேலும் பல அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் பேரணியில் இணைந்து கொண்டனர்.
முகமாலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேரணியை யாழ். தென்மராட்சி மக்கள் எழுதுமட்டுவாள் பகுதியிலிருந்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து மிருசுவில் பகுதிக்கு பேரணி சென்றடைந்ததுடன், அங்கு மிருசுவில் படுகொலை இடம்பெற்ற இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சாவகச்சேரி நகரில் தீப் பந்தங்களை ஏந்தி மத தலைவர்கள் உள்ளிட்டவர்கள் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச் சிலைக்கும் இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். செம்மணியை பேரணி சென்றடைந்தபோது செம்மணி புதைகுழிக்கு அருகில் மற்றுமொரு அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
செம்மணியிலிருந்து கண்டி வீதியூடாக யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன் உள்ள தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற இடத்தை பேரணி சென்றடைந்த போது அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரை பேரணி சென்றடைந்ததுடன், காங்கேசன்துறை வீதி ஊடாக யாழ். பல்கலைக்கழத்தை பேரணி சென்றடைந்து.
முள்ளிவாய்க்காலில் இருந்து எடுத்துவரப்பட்ட மண் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
பலாலி வீதி ஊடக யாழ். நல்லூருக்கு பேரணியாக சென்ற மக்கள் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகே கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பெருந்திரளான மக்கள் புடைசூழ யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலிருந்து யாழ். பருத்துறை வீதி ஊடக பொலிகண்டியை நோக்கி கவனயீர்ப்பு பேரணியின் இறுதிக் கட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து யாழ்.நெல்லியடியில் முதல் கரும்புலி மில்லரிற்கு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மந்திகைச்சந்தியில் பொலிஸார் போட்ட வீதித்தடைகளையும் உடைத்தெறிந்து பேரணி தனது இறுதி இலக்கான பொலிகண்டியை அடைந்தது.
பொலிகண்டியை வந்தடைந்தத நீதிக்கான பேரணியில் மக்கள் அலைகடல் என திரண்டு வடமராட்சி முழுவதும் சனவெள்ளத்தில் மூழ்கியது.
வாழ விடு வாழ விடு தமிழினத்தை, அழிக்காதே அழிக்காதே வாழ்விடங்களை அழிக்காதே என்ற வாசகங்கள் விண்ணதிரச் சிங்களத்தின் செவிப்பறை கிழிய வானைப்பிளக்கும் கோசங்கள் எழுப்பட்டன.
03/02/2021அன்று அம்பாறை பொத்துவில் ஆரம்பித்த நீதிக்கான பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக இன்று 7 ம் திகதி யாழ் பொலிகண்டி முற்றத்தை உணர்வெழுச்சியுடன் வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.