“யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுயாதீன சினிமாவினைக் கொண்டாடுதல்” எனும் தொனிப்பொருளினை மையமாகக் கொண்டு 2014ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது அதன் எட்டாவது பதிப்பினை இவ்வாண்டு கொண்டாடுகின்றது.
கொரோனாப் பெருந்தொற்றினால் மக்களின் இயங்கல் வெளி மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் ஏழாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது, கடந்த ஆண்டு கட்டம் கட்டமாக நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்திரைப்பட விழாவானது “அஜென்டா 14” எனும் இலாப நோக்கற்ற திரைப்படத்துறை சார்ந்த அமைப்பின் ஒழுங்குபடுத்தலின் கீழ் பல வெளிநாட்டு தூதரகங்கள், பண்பாட்டு நிறுவனங்கள், சிலோன் தியேட்டர்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை மற்றும் திரைப்படச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையோடு ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாப் பெருந்தொற்றினால் முடக்கப்பட்டிருந்த மக்கள் மீளவும் இயல்புக்குத் திரும்புவதற்குள்ளாகவே பாரிய பொருளாதார முடக்கத்தினை எதிர்நோக்குகின்றனர். ஆயினும் மக்கள் தம்மிடையே ஒன்றுகூடுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான வெளிகளை எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பர். இந்தப் புதிய ஆண்டின் ஆரம்ப நாட்களில் திரைப்படக் கலையினை இரசிப்பதற்கும் அதனைப் பற்றிக் கற்பதற்கும் அவை தொடர்பான உரையாடல்களை நிகழ்த்துவதற்குமான வெளியினை எட்டாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது உருவாக்கவிருக்கின்றது.
திரையிடல்கள், துறைசார் நிபுணர்களின் வகுப்புகள், திரைத்துறை சார்ந்தவர்களின் உரையாடல்கள், திரைத்துறை சார் இளைஞர்களுக்கான கலந்துரையாடல்கள் என பல பரிமாணங்களில் இத்திரைப்பட விழாவானது எம்மவர்க்கான களங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இத்திரைப்பட விழாவிலே பல விருதுகளை வென்ற வெவ்வேறு நாடுகளினுடைய திரைப்படங்கள், ஆவணப் படங்கள், விருதுக்காகப் போட்டியிடும் சர்வதேச மற்றும் இலங்கையில் வெளியிடப்பட்ட குறுந்திரைப்படங்கள், விருதுக்காகப் போட்டியிடும் அறிமுகத் திரைப்படங்கள் என்பன திரையிடப்படுகின்றன. எட்டாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவிலே விருதுக்காகப் போட்டியிடும் இலங்கை, இந்தியா, பிரேசில் மற்றும் பங்களாதே~; ஆகிய நாடுகளினுடைய 09 அறிமுகத் திரைப்படங்களும் துனீசியா, இலங்கை, இந்தியா, நேபாளம், குர்திஸ்தான், போலந்து மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறுந்திரைப்படங்களும் ஜேர்மன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, லெபனான், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, கானா, சுவீடன், ஜோர்ஜியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. காலை 09 மற்றும் பிற்பகல் 03 மணிக்கு குறுந்திரைப்படங்கள் திரையிடப்படும். நாள்தோறும் காலை 10.15, மதியம் 12.45, பிற்பகல் 3.45, மாலை 06.30 ஆகிய நான்கு காட்சிகளில் வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த திரைப்படங்கள் ஆங்கில உபதலைப்புகளுடன் திரையிடப்படும்.
30.12.2022 அன்று இளைஞர்களுக்கான திரைப்பட முகாமுடன் ஆரம்பமாகிய இத்திரைப்படவிழாவின் திரையிடல்கள் 02.01.2023 அன்று, யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்திலுள்ள றீகல் சினிமாவில் இன்டிகா பெர்டினான்டோவின் ‘வெடி நொவடின்ன லமாய்’( டீரடடநவிசழழக உhடைனசநn – குண்டுதுளைக்காத சிறுவர்கள்) என்னும் இலங்கைத் திரைப்படத்துடன் மாலை 06.30 மணிக்கு ஆரம்பமாகின்றன. அதனைத் தொடர்ந்து 03.01.2023 அன்று முதல் 08.01.2023 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, கைலாசபதி கலையரங்கிலே திரைப்படங்கள் திரையிடப்படும். 08.01.2023 அன்று மாலை 06.30க்கு லெனின் எம். சிவம் அவர்களின் ‘த புரொரெக்ரர் ( வுhந pசழவநஉவழச – பாதுகாவலன்) என்னும்; திரைப்படத்தின் காட்சிப்படுத்தலுடன் இத்திரைப்படவிழா நிறைவுபெறும். நிறைவு நிகழ்வின் இறுதித் திரையிடலும் விருது வழங்கும் நிகழ்வும் றீகல் சினிமாவில் இடம்பெறும் என்பதும் இத்திரைப்படக் காட்சிகள் அனைத்தும் இலவசமாகப் பார்வையிடக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஓவ்வொரு நாடும் தனக்கான பண்பாட்டு அடையாளங்களுடன் கலைகளை முகிழ்ப்பித்தாலும் அந்தப் படைப்புகள் பேசும் மனித உணர்வுகள் அந்த மொழி, பண்பாட்டு எல்லைகளைத் தாண்டி அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். எங்கோ ஒரு புள்ளியில் மனித உணர்வுகள் பார்வையாளர்களால் புரிந்துகொள்ளப்படவே செய்கின்றன என்பதனைக் கடந்த திரைப்படவிழாக்கள் உணர்த்தியிருக்கின்றன. இளைஞர்கள் திரைமொழியினைப் பயில்வதற்கும் அம்மொழியிலேயே பேசுவதற்கும் ஆர்வமாகியிருக்கும் காலம் உருவாகிக்கொண்டிருக்கின்றது. கொரோனாப் பெருந்தொற்றின் முடக்கல் இளைஞர்களுக்கு வேறொரு இயங்கல் வெளியினை தொலைபேசியூடே காட்டியிருக்கின்றது. திரைப்படங்களை இரசித்தல் என்பதையும் தாண்டி இளைஞர்களுக்கான களமாகவும், அவர்களுடைய திரை முயற்சிகளுக்கான வழிகாட்டியாகவும் அவர்களுக்கான அங்கீகாரத்தினைக் கொடுக்கும் இடமாகவும் இத்திரைப்பட விழா அமைகின்றது. திரையிடப்படும் குறுந்திரைப்படங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் குறுந்திரைப்படங்களுக்கு ‘தேசிய குறுந்திரைப்பட விருது’ மற்றும் ‘பார்வையாளர் விருது’ ஆகிய விருதுகளும் அறிமுகத்திரைப்படங்களிற்கு ‘சிறந்த அறிமுகத் திரைப்பட விருது’ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.
திரைமொழியில் ஆர்வமுடையோரிற்கு தொழினுட்பம் சார் அறிவு வழங்கும்போது, அத்திரைமொழி இன்னமும் வன்மையாகும் என்ற நோக்கினடிப்படையில் ஒவ்வொரு திரைப்படவிழாவிலும் தொழினுட்பம் சார் வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. அவ்வகையில் இவ்வருடம் ஒலி வடிவமைப்பு, ஒலிப்பதிவு, ஒலிக்கலவை, படத்தொகுப்பு மற்றும் படத்தயாரிப்பு ஆகியவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களையுடைய திரைப்படத் தொகுப்பாளரும் ஒலி வடிவமைப்பாளருமான நந்தா நந்தி ஜெயகொடி என்பவரால் ஒலி வடிவமைப்பு – தொழிநுட்பம் மற்றும் நுட்பம் என்ற தலைப்பிலே வகுப்பு நிகழ்த்தப்படவிருக்கிறது. காண்பிய ஊடக ஒலியின் கலைக்கான அறிமுகம் மற்றும் வெற்றிகரமான ஒலித்தயாரிப்பு ஒன்றிற்கான தொழிநுட்பத்தினையும், நுணுக்கங்களையும், பிரயோகங்களையும் விளங்கிக்கொள்ளல் போன்ற விடயங்களை இவ்வகுப்பு உள்ளடக்கியிருக்கும். இவ்வகுப்பானது 03.01.2023 அன்று காலை 9.30 முதல் பிற்பகல் 4.30 வரை கண்டிவீதி, யாழ்ப்பாணத்திலுள்ள ‘கோத்தே’ நிறுவனத்தின் பண்பாடுகளிற்கான வெளியான ‘கலம்’நிறுவனத்தில் நடைபெறும். 07.01.2023 அன்று திரைப்பட இயக்குனர் லெனின்.எம்.சிவம் அவர்களினால் திரைப்படவியல் மற்றும் திரைக்கதை ஆகியவை தொடர்பான வகுப்பு ‘கலம்’நிறுவனத்தில் நடைபெறும். இவ்வகுப்புகளில் முற்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்குபற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைமுயற்சிகளை அதன் பயிலுகை சார்ந்து அணுகும் கலந்துரையாடல்களும் இத்திரைப்படவிழாவின் அங்கமாக இருக்கின்றன எனும் வகையில் ‘இலங்கை தமிழ் மொழிச் சினிமா-நேற்று, இன்று, நாளை’ என்ற தலைப்பில் சுமதி சிவமோகன், லெனின் எம்.சிவம், விசாகேச சந்திரசேகரம் மற்றும் சிவராஜ் ஆகியோரின் கலந்துரையாடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, கைலாசபதி கலையரங்கில் 06.01.2023 அன்று பகல் 12.45 மணிக்கு இடம்பெறும்.
குடாநாட்டின் சுயாதீன சினிமாவைக் கொண்டாடுதல் என்னும் தொனிப்பொருளில் நடைபெற்றுவரும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவில் வரும் காலங்களில் இன்னமும் பல நீளத் திரைப்படங்களும் குறுந்திரைப்படங்களும் குடாநாட்டிலிருந்து பங்குபற்றவேண்டும். எம்மவர் படைப்புகளை நாங்களே கொண்டாடும் விழாவாக இது அமைய வேண்டும். திரைத்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பும் பங்கேற்பும் குறைவாகவே காணப்படும் நிலை மாற வேண்டும். திரைப்படங்களைப் பார்வையிடவும், கலந்துரையாடவும், இன்னமும் இத்துறையில் நாங்கள் வளரவும் வாய்ப்பளிக்கும் இத்திரைப்பட விழாவினை நாம் பயன்படுத்த வேண்டும்.
- செல்வி