எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என பாராளுமன்ற கேள்வி பதில் நேரத்தின் போது கருத்து தெரிவித்த சாணக்கியன் மேற்படி தெரிவித்துள்ளார்.
09/02/2021 அன்று நடைபெற்ற அமர்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நவகிரி என்ற செயற்திட்டத்தில் அவசர வான்கதவு என்பதொன்று காணப்படுகிறது. 2010 ஆம் ஆண்டிலிருந்து அவசர வான்கதவு என்பது மட்டக்களப்பு மக்களாகிய எமக்கு கிடையாது இவ்வாறான நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது குளத்தை அண்மித்த பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்படும் சந்தர்பங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. 2010 ஆம் ஆண்டிலிருந்து பல கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுகின்றது. மக்கள் ஒவ்வொரு வருடமும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஆறுகள் முறையாக புனரமைக்கப்படாமை வெள்ளப்பெருக்கிற்கான பிரதான காரணமாகும்.
அத்துடன் மட்டக்களப்பு முகத்துவாரத்தை அண்மித்த ஆறுகளையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் ஆழம் குறைந்தமையானது இதற்கான பிரதான காரணம் ஆகும் குறைந்தளவு மழை பெய்தாலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வருடமும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர். அத்துடன் எம்மக்களுக்கான வெள்ள நிவாரண நிதியானது ஒவ்வெரு வருடமும் ஒதுக்கப்பட வேண்டும் நவகிரியும், குளபுணரமைப்பும் உங்களது் திட்டத்தில் காணப்படுகிறதா?.என அமைச்சரிடம் வினாவினேன்.
ஆறுகள், மற்றும் குளங்களை முறையாக புனரமைத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க முடியும். ரூகம் செயற்திட்டத்தின் MCM இனது அளவானது 58. என்று மதிப்பிடப்பட்டுள்ளது அனால் இதன் தேவையான அளவானது MCM 90 ஆக செயல்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இத் திட்டத்துக்கான போதியளவு கடன் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறாததன் காரணமாக இச்செயற்திட்டத்தை இடைநிறுத்துவதாக எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அறியகூடியதாக உள்ளது. உண்மையாகவே இத் திட்டமானது கைவிடப்படக் கூடாது. 90 Mcm அளவினை நாங்களும், மக்களும் கேட்கின்றோம். இடை நடுவில் இவ் திட்டத்தை நிறுத்தக் கூடாது. இத் திட்டமானது எம் மக்களுக்கான ஓர் அத்தியாவசிய தேவை ஆகும்.
இந்தத் திட்டமானது சரியான முறையில் செய்யப்படுமிடத்து 15,000 தொடக்கம் 20,000 ஏக்கர் அளவில் வருடங்களுக்கு இரண்டு முறை விவசாயம் மேற்கொள்ள முடியும். மீன் பிடி துறையையும் அவிபிருத்தி செய்ய முடியும் இதைத் தவிர பிற தொழில்களையும் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் தற்போதுள்ள முந்தினா ஆறு திட்டத்தினை நிறுத்தியே இதனை செய்ய வேண்டும்.
இப்போது இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது நிச்சயம் அற்றதாக காணப்படுகின்றது. ஏனெனில் ஆற்றுப் படுக்கையில் அரசோடு சேர்ந்தவர்களின் சட்ட விரோதமாக மணல் அகழ்வதைத் தவிர வேறு செயற்பாடுகள் இத் திட்டத்திற்காக முன்னெடுக்கப்படவில்லை முன் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
எங்களுடைய உரிமை சார்ந்த கவனஈர்ப்பு போராட்டமான P2P போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றதே தவிர இவ்வாறான எமது மக்களுக்கு பயனுள்ள பொருளாதாரத்தை மற்றும் வாழ்வாதாரத்தை கட்டமைக்கும் சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை. -என்றார்.