வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து வழக்கு விசாரணை மீண்டும் இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில், சிரேஷ்ட சட்டத்தரணிகளான அன்டன் புனிதநாயகம், குருஸ், தயாபரன் உள்ளிட்ட 16 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகி ஆலய நிர்வாகத்திற்கு சார்பாக வாதிட்டனர்.
கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரும் இன்று (புதன்கிழமை) வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வழக்குத்தொடுனர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரமும் மன்றினால் நிராகரிக்கப்பட்டது. வழக்கு மீண்டும் மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.