72 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021 ஐ உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பத்ம விபூஷன் பெற்றவர்களில் அடங்குவர்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாக்களில் இந்த விருதுகள் இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு 119 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷண் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன.
விருது பெற்றவர்களில் 29 பெண்கள் மற்றும் பட்டியலில் வெளிநாட்டினர் / என்.ஆர்.ஐ / பி.ஓ.ஓ / ஓ.சி.ஐ பிரிவைச் சேர்ந்த 10 நபர்கள், மரணத்திற்குப் பின் விருது பெற்ற 16 பேர் மற்றும் ஒரு திருநங்கை விருது பெற்றவர்கலின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகம் சார்பில் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இறப்பிற்குப் பின், பத்ம விருதுகளில் மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது கலைத்துறையில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கடுத்த நிலையில் உள்ள பத்ம பூஷண் விருதிற்கு தமிழகம் தரப்பில் யாரும் தேர்வாகவில்லை.
அதே நேரத்தில் பத்ம ஸ்ரீ விருதிற்கு, தமிழகம் சார்பில் விளையாட்டுத் துறையில் பி.அனிதாவிற்கும், கலைத்துறையில் பாம்பே ஜெயஸ்ரீ, சுப்பு ஆறுமுகம் மற்றும் சிவசங்கருக்கும் (இறப்பிற்குப் பின்) வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறையில் சாலமன் பாப்பையாவிற்கும், விவசாயத்துறையில் பாப்பம்மாள் எனும் பெண்ணிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் மறச்சி சுப்புராமிற்கு சமூக சேவைக்காகவும், மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, சென்னையின் 2 டாக்டர் என பிரபலமாக அறியப்பட்ட திருவேங்கடம் வீரராகவனுக்கும் (இறப்பிற்கு பின்) வழங்கப்பட்டுள்ளது.
தொழில்துறையில் சிறந்து விளங்கும், ஜோஹோ நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்புவிற்கும், கோவையில் குறைந்த விலையில் ஏழைகளின் பசியாற்றிய சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியத்திற்கும் (இறப்பிற்குப் பின்) வழங்கப்பட்டுள்ளது.