ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை நிராகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
30 /1 மற்றும் 40/ 1 தீர்மானங்களை மீறும் வகையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அமைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உயர்ஸ்தானிகரது அறிக்கை 17 பக்கங்களைக் கொண்டிருப்பதுடன் அதில் 2 பக்கங்கள் மாத்திரமே மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கம்மன்பில அறிக்கையில் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு நம்பகரமான ஆதாரங்கள் ஏதுமில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகையில் ‘இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை தம்மால் பொதுவாகக் கூற முடியும். பல நாடுகளில் அரசாங்கங்களுக்கு அரசியல் தேவைகள் உள்ளன.
உதாரணமாக டொரன்டோவில் இலங்கையர்களின் வாக்குகள் மிக முக்கியமானவை. லண்டனில் முக்கிய பதவியாக மேயரை நியமிப்பதற்குத் தேவையான அரசியல் பின்புலம் இலங்கையுடன் தொடர்புடையது. இவை குறித்து நாம் அறியாமல் இல்லை. போதுமானளவு பதிலளிப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.