ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இதன்போது, இலங்கை அரசாங்கத்தின் மீது புதிய பிரேரணையொன்று கொண்டுவருவதற்கான பூர்வாங்க பணிகளை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணை நாடுகள் முன்னெடுத்திருந்தன.
இந்நிலையில், அந்த தீர்மானத்தில் எவ்விதமான உள்ளடக்கங்கள் அமைய வேண்டும், இலங்கையின் பொறுப்புக்கூறலை எவ்வாறு செய்ய வைப்பது என்பதை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘தமிழ்த் தேசியக் கொள்கைத் தளத்தில்’ பயணிக்கின்ற கட்சிகள் சிந்தித்து வந்தன.
அதேநேரம், இம்முறை தமிழ் தேசியத் தளத்தில் ஒன்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையைக் கையாள வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் வலுத்தன.
‘தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல் காரர்கள்’ ஆகுவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைக்கும் முயற்சிகளை இராப்பகலாக முன்னெடுத்தன. ஆனால் ஏதோவொரு விடயத்தில் முட்டுப்பாடு நீடித்தே வந்தது.
இதில் பிரித்தானிய தமிழ்ப் பேரவை மற்றும் இன்னோரன்ன அமைப்புக்கள் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாக முயற்சியை எடுத்தார்கள். பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புக்களின் முன்மொழிவுகள் அடங்கிய வரைவை சுமந்திரன் விக்னேஸ்வரனிடத்திலும், கஜேந்திரகுமார் இடத்திலும் கையளித்தார்.
ஆனால், பிறிதொரு தரப்பினது ஆவணம் என்பதை விக்னேஸ்வரனுக்கு கூறியே கையளித்ததாக சுமந்திரன் குறிப்பிட்டிருந்தாலும் விக்னேஸ்வரன் அது தொடர்பில் வெளிப்படுத்திய பிரதிபலிப்புக்கள் சுமந்திரனுக்கு பலத்த அடியாகத்தான் இருந்தது.
இந்த இடைவெளியை கஜேந்திரகுமாரும் பயன்படுத்தினார். சுமந்திரன் கையளித்த ஆவணத்திணை ஏற்கமுடியாது என்றும் அது ‘கால அவகாசத்துடனாது’ என்றும் உரைத்து விட்டார்.
ஏற்கனவே ஐ.நா.வில் மைத்திரி-ரணில் அரசுக்கு ‘கால அவகாசம்’ வழங்கினார் என்ற பழியை சுமந்து கொண்டிருக்கும் சுமந்திரன் மீண்டுமொருமுறை அவ்வாறதொரு விமர்சனத்திற்குள் சிக்கிக் கொண்டார்.
இச்சமயத்தல் தான், வி.எஸ்.சிவகரனை தலைவராக கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் தமிழ்த் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புக்களையும், மதத்தலைவர்களையும் ஒன்றிணைக்கும் பணியை முன்னெடுத்தது.
அதில் அந்த இயக்கம் வெற்றி பெற்றது. ஆனாலும் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களை முதல் கூட்டத்திற்கு அழைக்காது விட்டமை விமர்சனத்தினை ஏற்படுத்தியது.
அந்த விமர்சனம் கூர்ப்படைந்து ‘சிவகரை யாரோ இயக்குகின்றார்கள் என்றும், சிவகரன் சுமந்திரனுக்கு வெள்ளை அடிக்கின்றார் என்றும் சிவகரனை சுமந்திரனே பின்னணியில் இருந்து நடத்துகின்றார் என்றும்’ பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிப்பிட்டன.
சிவகரனின் சகிப்புத்தன்மையால் டிசம்பர் 29ஆம் திகதி முதலாவது கூட்டம் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. இதில் கஜேந்திரகுமார் தரப்பு பங்கேற்றிருக்கவில்லை. விக்னேஸ்வரன் தன்னுடைய பிரதிநிதியாக அருந்தவபாலனை அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் அவருடைய கூட்டணியில் உள்ள சிவாஜிலிங்கமும், அனந்தி சசிதரனும் பங்கேற்றிருந்தார்கள். அத்துடன் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தார்கள்.
இந்தக் கூட்டத்தில் நடந்தது உட்பட அடுத்தடுத்த நடைபெற்ற கூட்டங்களில் நடந்தவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுமந்திரன் ஒப்புவித்தவை வருமாறு,
கிளிநொச்சியில் கூட்டத்தில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. கஜேந்திரகுமார் தரப்பு இதுகால வரையிலும் ஐ.நாவில் கொண்டிருந்த நிலைப்பாட்டையும் நானே தெளிவுபடுத்தினேன். இருப்பினும் அவர்கள் பங்கேற்காத கூட்டத்தில் அவர்கள் எமது நிலைப்பாட்டுடன் இணங்கமாட்டார்கள் என்பதை பகிரங்கமாக நான் கூறுவது பொருத்தமில்லை என்பதால் அவர்களை நேரில் அழைத்து விடயங்களை கலந்தாலோசிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதுமட்டுமன்றி, இத்தனை காலமும் நான் கால அவகாசம் வழங்கினேன் என்று என்மீது குற்றம் சாட்டியவர்கள் அனைவரும் அந்த மேடையில் இருந்தார்கள். அவர்களுக்கு 2017, 2019 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை படித்துக் காண்பித்து அதில் கால நீடிப்பு என்ற சொல்லே இல்லை என்பதை நான் தெளிவு படுத்தினேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
அதன்பின்னர் அக்கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைவாக, டிசம்பர் 31ஆம் திகதி வவுனியாவில் மீண்டும் கூடுவதென தீர்மானிக்கப்பட்டது. எனினும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பிற்கு நேரமின்மை காரணமாக அக்கலந்துரையாடல் ஜனவரி 3ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
அக்கூட்டமும் வவுனியாவில் இடம்பெற்றது. என்னுடன் தமிழரசுக்கட்சியின் பதில்செயலாளரும் கூட்டமைப்பின் செயலாளருமான வைத்தியர் சத்தியலிங்கமும் பங்கேற்றிருந்தார். சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். கஜேந்திரகுமாரும் அவருடைய தரப்பினரும் பங்கேற்றார்கள். சிவில் தரப்பினரும் இருந்தார்கள் என்றார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் சிவகரன் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதில் ஏற்பட்ட இழுபறிகள் அதனை தொடர்ந்து இடம்பெற்ற வாக்குவாதங்கள் ஈற்றில் சமரசமாகி அருட்தந்தை ரவிச்சந்திரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கி முன்னெடுத்தமை பற்றி சுமந்திரன் குறிப்பிடவில்லை.
எனினும், மேற்படி இந்த முரண்பாடுகளை தவிர்த்து அவர் அக்கூட்டத்தில் நடைபெற்ற மற்றைய விடங்களை கூறலானார்.
கூட்டம் ஆரம்பமான வேளையோடு, இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் வைத்திருப்பதால் பயனில்லை என்று கஜேந்திரகுமார் குறிப்பிட்டார். கடந்த பத்து வருடங்களாக நாம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அதனை வைத்திருந்தபோதும் அதில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அதில் உண்மைகள் உள்ளன என்பதை நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால் நாம் இலங்கை அரசாங்கத்தினையே ஏற்றுக்கொள்ளச் செய்யுமளவிற்கு செயற்பட்டிருக்கின்றோம் என்பதை பதிலுரைத்திருந்தேன்.
தொடர்ந்து, எமது முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்று குறிப்பிட்ட கஜேந்திரகுமார் தாங்கள் 2012ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தி வரும் வகையில் பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா.மனித உரிமைகள் போரவையிலிருந்து மீளெடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கு ஏற்ற வகையிலான வரைபொன்றை தயாரிக்க வேண்டும் என்றார். எமது முயற்சி தோல்வியடைந்தமையால் அவ்விதமான முயற்சியொன்றை முன்னெடுப்பதென்ற இணக்கப்பாட்டிற்கு வந்தோம்.
ஆனால் குற்றவியல் நீதிமன்றத்தினை மட்டும் மையப்படுத்தி இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை கையாள்வதற்கு அனந்தியும், சிவாஜிலிங்கமும் இடமளிக்கவில்லை. கஜேந்திரகுமாரின் கூற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
விக்னேஸ்வரன் தலைமையில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தினையும் அதில் அக்கூட்டணியின் நான்கு தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளதனையும் காண்பித்தார்கள். அதில் நான்கு பரிந்துரைகள் உள்ளதாகவும் கூறினார்கள்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயம் இருக்கும் அதேவேளை குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வாதிட்டார்கள்.
எனினும், கஜேந்திரகுமார், அவ்வாறு இரண்டிலும் காலை வைத்துக்கொண்டிருப்பதாக இருந்தால் கடந்த காலத்தில் வெளியான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை பற்றிய மற்றுமொரு ஆய்வறிக்கையே வெளியாகும் என்று சுட்டிக்காட்டினார்.
இதனால் சிவாஜிலிங்கத்திற்கும், கஜேந்திரகுமாருக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் வலுத்தன. குறிப்பாக சிவாஜிலிங்கம், ஒருகாலால் உதைக்கும்போது மற்றைய காலை பூமியில் அழுத்தமாக வைத்துக்கொண்டு தான் உதைக்க வேண்டும். இரண்டு காலையும் உயர்த்திக்கொண்டு உதைக்க முடியாது என்று உதாரணம் கூறி தர்க்கம் செய்தார்.
இலங்கையின் பொறுப்புக்கூறலை பேரவையிலிருந்து மீள எடுத்தலும், ஏனைய விடயத்தினை தொடர்ச்சியாக ஐ.நாவினதும், சர்வதேசத்தினதும் மேற்பார்வையில் வைப்பதே பொருத்தமானது என்பது தான் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவும் இருந்தது.
இவ்வாறான பல வாதவிவாதங்களுக்கு பின்னர் கஜேந்திரகுமாரும் பொறுப்புக்கூறல் தவிர்ந்த இலங்கையின் ஏனைய விடயங்களை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் வைத்திருப்பதற்கு ஆமோதித்தார். பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
எனினும், விக்னேஸ்வரன் தரப்பின் தயாரிக்கப்பட்ட ஆவணமொன்று ஏற்கனவே கையொப்பத்துடன் இருப்பதால் புதிதாhக தயாரிக்கப்படும் ஆவணத்தினை அவர்கள் ஏற்றுக்கொள்வது பற்றி விக்னேஸ்வரனுடன் கலந்துரையாட வேண்டும் என்று நான் கூறம் அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி ஆறாம் திகதி எனக்கும், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஏற்கனவே ஏற்பாடாகி இருந்தது. அந்தச் சந்திப்பில் இந்த விடயத்தினை கலந்தாலோசிப்போம் என்றும் முடிவெடுத்தோம். அந்த தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்த கட்டம் செல்வதென்றும் தீர்மானித்;தோம்.
மேலும் வவுனியா கூட்டத்தின் ஈற்றில் இணக்கபாடு ஏற்பட்டு பொது ஆவணம் தயாரிக்கப்படுகின்ற பட்சத்தில் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அரசியல் அணிகளின் தலைவர்களும், ஏனைய சிவில், மத பிரதிநிதிகளும் கைச்சாதிடுவது பொருத்தமானது என்று கஜேந்திரகுமார் முன்மொழிந்தார். அதனை நானும் ஏற்றுக்கொண்டேன். அங்கிருந்தவர்கள் யாரும் எதிர்க்கவில்லை.
இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்ட வகையில் ஆறாம் திகதி கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தார்கள். விக்னேஸ்வரனுடன் சர்வேஸ்வரனும் பங்கேற்றிருந்தார்.
அந்தக் கூட்டத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மீளெடுப்பது என்ற கோரிக்கையை மட்டும் ஐ.நாவின் உறுப்பு நாடுகளிடத்திலும், உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்சிலெட் அம்மையாரிடமும் முன்வைப்பதென்றும் பிறிதொரு கடிதத்தினை ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதென்றும் அதில் பொறுப்புக்கூறலுக்கான சாத்தியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான வரைபைச் செய்வதற்காக குழுவொன்றை விக்னேஸ்வரனே முன்மொழிந்தார். என்னையும், கஜேந்திரகுமாரையும், சர்வேஸ்வரனையும் அவரே பெயரிட்டார். மறுதினமான 7ஆம் திகதி அக்குழு கூடியபோது சர்வேஸ்வரன் ‘தமது தரப்பு தயாரித்த வரைவில் உள்ள விடயங்கள் பற்றி குறிப்பிட்டு அவற்றையும் உள்ளீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பல்வேறு விளங்ககங்களை அளித்து ஏற்கனவே அவர்கள் தரப்பில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தினை முன்னிலைப்படுத்தினார். அதன்போது, உங்கள் கட்சியின் தலைவர் விக்னேஸ்வரனுடன் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்காக அவ்விடயத்தினை மட்டும் மையப்படுத்தியே தீர்மானத்தினை மேற்கொள்வதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நீங்கள் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஆகவே தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுப்பது பொருத்தமற்றது என்று நான் கூறினேன். ஆதன்பின்னர் அவரே அந்த சந்திப்பிலிருந்து வெளியேறியிருந்தார்.
அதன்பின்னர் நானும் கஜேந்திரகுமாரும் இணைந்து ஐ.நாவுக்கான ஒரு ஆவணத்தினை தயாரித்தோம். அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் ‘இனப்பகொலை’ என்ற சொற்பதம் உள்ளீர்க்கப்படவில்லை.
பின்னர், 9ஆம் திகதி கிளிநொச்சியில் கலந்துரையாடலைச் செய்தோம். இதில் விக்னேஸ்வரன் அணியின் பங்காளிக்கட்சியின் தலைவர்கள், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியின் தலைவர்கள் என்று மூன்று கூட்டுக்களின் சகல பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இதில் அனுப்பி வைக்க வேண்டிய வரைபு தொடர்பில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. கஜேந்திரகுமாருக்கும், ஸ்ரீகாந்தாவுக்கும் கைகலப்பு வருமளவிற்கு வாதப்பிரதிவாதங்களைச் செய்தனர்.
சிரியப் பொறிமுறையை உள்ளீர்ப்பதில் கடும் பிரயத்தனங்களும் மறுதலிப்புக்களும் இருதரப்பிடையேயும் நீடித்தது. ஈற்றில் கஜேந்திரகுமார் சிரியப் பொறிமுறையை பொது ஆவணத்தினுள் உள்ளீர்ப்பதற்காக விட்டுக்கொடுத்தார். ஆனால் அதற்கு கால வரையறையொன்றை விதிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்லும் பணி மிகவும் கடினமானது. அதில் ஒரு சதவீதமான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்ற எனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி பலர் இந்த கோரிக்கையை முன்வைப்பதால் அதற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம் என்றும் கூறினேன்.
கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறலுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை நோக்கிய நகர்த்தும் விடயத்தினைப் பற்றி வெளிப்படையாக மக்களுக்கு கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றார். ஏனென்றால் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் மனித உரிமைகள் பேரவையை காண்பித்து அதிகளவு எதிர்பார்ப்புக்கள் அளிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று கூறினார்.
அப்போது, அவ்விதமாக ஏமாற்றமடைந்த மக்களித்தில் மீண்டும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது என்று கூறுவது மேலும் மேலும் எதிர்பார்ப்புக்களைவ வலுக்கச் செய்யுமல்லவா என்று நான் குறிப்பிட்டேன். அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை தீர்மானம் செல்வதில் உள்ள தடைகளை வெளிப்படுத்தினேன்.
இருப்பினும் ஒருவாய்ப்பாக அதனையும் முயற்சிக்கலாம் என்று அவர்களின் கருத்துக்கு இணங்கிக் கொண்டேன். அதுமட்டுமன்றி, சர்வஜன வாக்கெடுப்பு விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டு உள்ளீர்க்கப்படவில்லை.
ஏனென்றால் ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வினை கோரும் நாம் வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை கோரினால் அது முன்னுக்குப் பின் முரண்பாடான விடயமாக காணப்படும் என்பதால் அதனைத் தவிர்த்தோம்.
ஈற்றில் கஜேந்திரகுமார் பயணம் செய்ய வேண்டியிருந்ததன் காரணத்தினால் வரைவினைத் தயாரகிக்கும் செயற்பாட்டை என்னையே முன்னெடுக்குமாறு கூறினார். நான் அதனை ஏற்றுக்கொண்டு வரைவினைத் தயாரித்தேன்.
இதன்போதும் மின்னஞ்சல் ஊடாக பலதரப்பட்ட திருத்தங்கள், முன்மொழிவுகள், வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளிட்டவற்றில் மாற்றப்பட்டன. இந்த செயற்பாட்டில் என்னுடன் கலாநிதி.கு.குருபரனும் இணைந்திருந்தார்.
பின்னர் ஆவணம் ஒருவாறு 13ஆம் திகதி அளவில் இறுதியானது. எனினும் மறுதினமான பொங்கலன்று அதற்கான கையொப்பம் பெறும் செயற்பாடு நடைபெற்றிருக்கவில்லை. ஆகவே 15ஆம் திகதிக்குள் கையொப்பங்களையும் மின்னஞ்சல்கள் ஊடாக பெற்று ஐ.நாவுக்கான பொது ஆவணத்தினை இறுதி செய்வது என்று தீர்மானித்தோம்.
அதன்பின்னர் நடந்தது என்ன? கையொப்பம் விவாகரத்தில் நடந்தது என்ன? சுமந்திரனின் ஒப்புவிப்பை அடுத்த பாகத்தில் எதிர்பாருங்கள்…