ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்துள்ள அரசாங்கம், அனுசரணை நாடுகளின் தூதுவர்களுடன் 08.02.2021 அன்று ஆலோசனை நடத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ள அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்த நிலையிலேயே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களை முன்வைத்த அனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள தூதரகங்களான அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளையே அவர் சந்தித்துள்ளார். கொழும்பில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விளக்கமளித்துள்ளதாகவும், கூறப்படுகிறது.
உள்நாட்டு செயல்முறைகள் குறித்தும், அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு குறித்தும், அனுசரணை நாடுகளின் தூதுவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர் ஜிஎல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க ஆகியோரும், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் கலந்து கொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.