இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் இன்று 04.03.2021 வியாழக்கிழமை அதிகாலை அன்டிகுவா, கூலிஜ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றது.
இலங்கை சுழல்பந்துவீச்சாளர் அக்கில தனஞ்சய ஹெட் – ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தியபோதிலும் கீரன் பொலார்ட் ஒரே ஓவரில் 6 சிச்கர்களை விளாசி மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியில் பிரதான பங்காற்றினார்.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 132 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிபோது 3 ஓவர்களில் 48 ஓட்டங்களைக் குவித்திருந்தது. ஆனால், அடுத்த ஓவரின் 2ஆம், 3ஆம், 4ஆம் பந்துகளில் முறையே எவின் லூயிஸ் (28), கிறிஸ் கேல் (0), நிக்கலஸ் பூரன் (0) ஆகியோரின் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்திய அக்கில தனஞ்சய ஹெட் – ட்ரிக்கைப் பதிவுசெய்து மேற்கிந்தியத் தீவுகளைத் திணறவைத்தார்.
எனினும் அக்கில தனஞ்சயவின் 3 ஆவது ஓவரில் கீரன் பொலார்ட் 6 சிக்ஸ்களை விளாசி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அத்துடன் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் யுவ்ராஜ் சிங்குடன் பொலார்ட் இணைந்து கொண்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 2007இல் ஸ்டுவர்ட் ப்றோடின் ஒரே ஓவரில் யுவ்ராஜ் சிங் 6 சிக்ஸ்களை விளாசியிருந்தார்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆரம்ப வீரர் நிரோஷன் திக்வெல்ல (33), 3ஆம் இலக்க வீரர் பெத்தும் நிஸ்ஸன்க (39) ஆகிய இருவரே இலங்கை துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். ஆனால், இவர்களைவிட வேறு எவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.
மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ஒபெத் மெக்கோய் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 13.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
அணித் தலைவர் கீரன் பொலார்ட் 11 பந்துகளை மாத்திரம் எதிர்கொணடு 6 சிக்ஸ்களுடன் 38 ஓட்டங்களையும் முன்னாள் அணித் தலைவர் ஜேசன் ஹொல்டர் 29 ஓட்டங்களையும் எவின் லூயிஸ் 28 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்கில தனஞ்சய 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன் விருது கீரன் பொலார்டுக்கு வழங்கப்பட்டது.