டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பார்வையாளர்களின்றி நடத்தவேண்டி வரலாம் என சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தொமஸ் பெச்சும் வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் சங்கம்) தலைவர் செபஸ்டியன் கோவும் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படும் என முன்னர் தெரிவித்துவந்த தோமஸ் பெச், பார்வையாளர்களே இல்லாமல் விழாவை நடத்தவேண்டிவரலாம் என கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உலகிலுள்ள 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் தலைமைகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய கலந்துரையாடலின்போது சகலரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா நடத்தப்படவேண்டும் என்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தோமஸ் பெச் குறிப்பிட்டார்.
‘ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நாங்கள் எதிர்கொள்ளக்கூடிய சகல விடயங்களுக்கும் எம்மை தயார்படுத்திக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருகின்றோம்’ என வீடியோ செய்தி வெளியீட்டில் தோமஸ் பெச் தெரிவித்தார்.
ஏற்பாடுகள் குறித்து விளக்கிய அவர், ‘குடிவரவு விதிகள், தனிமைப்படுத்தல் விதிகள், ஒலிம்பிக் கிராமத்தில் சமூக இடைவெளி, பார்வையாளர்கள் தொடர்பான விடயங்கள் ஆகியன பற்றி கவனஞ்செலுத்தப்படுகின்றது’ என்றார்.
‘டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் ஜூலை 23ஆம் திகதி டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பிக்காது என நம்புவதற்கு இப்போதைக்கு எவ்வித காரணமும் இல்லை. அதனால்தான் இதற்கு பி திட்டம் எதுவும் இல்லை. இவ் விழாவை பாதுகாப்பாகவும் உயிராபத்தற்றதாகவும் நடத்தவேண்டும் என்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்’ என ஜப்பானின் கியோடோ நியூஸ் ஊடகத்துக்கு பெச் தெரிவித்தார்.
அதேவேளை, மீள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை மூடிய அரங்குகளில் நடத்த நேரிடும் என்பதை செபஸ்டியன் கோ பிரபு ஒப்புக்கொண்டார்.
ஒலிம்பிக் விளையாட்டு விழா இரத்தாகலாம் என செய்தி வெளியானபோதிலும் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் விளையாட்டு விழாக்கள் நடைபெறும் என்பதில் செபஸ்டியன் கோ நம்பிக்கை கொண்டுள்ளார்.
‘இரசர்கள் அரங்கில் இருப்பதையும் கோஷங்கள், ஆரவாராம் இடம்பெறுவதையும் நான் விரும்புகின்றேன். ஆனால், விழாவை மூடிய அரங்குகளுக்குள் எங்களால் நடத்தவேண்டிவந்தால் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணுகின்றேன்’ என செபஸ்டியன் கோ குறிப்பிட்டார்.