கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் செயற்பாட்டை முடிவிற்கு கொண்டு வருமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆர்வலர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வது அவர்களது நம்பிக்கைகளுக்கு முரணானது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நான்கு பிரதிநிதிகளால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை மட்டுமே ஒரே தெரிவாகக் கொள்வது மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறையாக அமையும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரிகளான Ahmed Shaheed, Fernand de Varennes, Clément Nyaletsossi Voule மற்றும் Tlaleng Mofokeng ஆகியோரால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று (26.01.2021) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
தாம் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களையே பின்பற்றுவதாகவும் அதனை நிராகரித்தால் ஏற்படக்கூடிய மோசமான நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டியேற்படும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.