இலங்கை அரசாங்கத்தினால் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட திட்ட இனப்படுகொலை நிகழ்வு நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவுறுகின்றது.
அந்தப் படுகொலைக்கும் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற படுகெலைகளுக்கும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் படுகொலைகளுக்கும் நீதி கோரும் போராட்டம் நேற்று பல பகுதிகளிலும் இடம்பெற்றது.
ஜுலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவு நாளான நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும் நினைவேந்தல் நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் வவுனியா கல்முனை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. வவுனியாவில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மயூரசர்மா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் இனப்படுகொலைகளுக்கு சர்வதேசம் பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
மேலும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்படல் வேண்டும்,
தமிழ்த் தேசமும் இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும், தமிழர்களது காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படல் வேண்டும், இராணுவமயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும்,
தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும், என்னும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொது மக்கள் தாங்கியிருந்தார்கள்.