– நிலாந்தன்-
இம்மாதம் 8 ஆம் திகதி யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டது. அதற்கடுத்த கிழமை குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் எதிர்த்தார்கள். அதற்கடுத்த கிழமை அதாவது கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நிலாவரை கிணறுள்ள பகுதியில் தொல்லியல் திணைக்களம் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
இடையில் தீவுப்பகுதியில் நில அளவைத் திணைக்களம் படைத்தரப்புக்கு நிலங்களை அளக்க முற்பட்டபோது அதுவும் பிரச்சினையாகியது. நேற்று தையிட்டியில் ஒரு விகாரக்கான அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இவையாவும் அண்மைக்கால பிரச்சினைகள் குறிப்பாக ஒரு குறுகிய கால கட்டத்திற்குள் நடந்திருக்கும் பிரச்சினைகளை தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது?
இது ஜெனிவாவை நோக்கி செல்லும் காலம். தமிழ் மக்கள் ஜெனிவா கூட்டத்தொடரை நோக்கி உரிய தயாரிப்புகளை செய்ய வேண்டிய ஒரு காலகட்டத்தில் இவ்வாறு புதுப்புது பிரச்சினைகள் உருவாக்கப்படுவதன் பின்னணி என்ன?
விடை மிகவும் எளிமையானது. அரசாங்கம் தமிழ் மக்களை நீண்டகால பிரச்சினைகளுக்காக போராடுவதை விடவும் குறுங்கால உடனடிப் பிரச்சினைகளில் மூழ்க வைத்து தமிழ் மக்களின் கவனத்தை சிதறடிக்கிறது. இதை ஒரு உத்தியாக அவர்கள் அண்மைக் காலங்களில் முன்னெடுத்து வருகிறார்கள். கிழமைக்கு ஒரு பிரச்சினை என்று வரும் பொழுது அரசியல் கட்சிகளினதும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகங்களினதும் கவனம் புதிய பிரச்சினைகளின் மீது குவியும். இது அடிப்படைப் பிரச்சினைகளில் மீது தமிழ் மக்களின் கவனம் குவிவதை சிதறடிக்கும். அதுமட்டுமல்ல இது சிங்கள மக்களின் கவனத்தையும் சிதறடிக்கும்.
எப்படியென்றால் ராஜபக்ஷக்களின் இரண்டாவது ஆட்சி முதலாவது ஆட்சியை போல இலகுவான ஒன்றாக இருக்கவில்லை என்பதைத்தான் தென்னிலங்கையில் கடந்த ஓராண்டு கால அனுபவம் நிரூபித்திருக்கிறது. கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. வைரஸ் தொற்றினால் முடக்கப்பட்ட பொருளாதாரம் முழுஅளவுக்கு நிமிர முடியவில்லை. ஒருபுறம் பொருளாதார நெருக்கடிகள்; இன்னொருபுறம் அரசாங்கத்தின் இறக்குமதி கொள்கைகளால் நாட்டில் சாதாரண பொருட்களின் விலைகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன.
மஞ்சள் இல்லாத பழப்புளி இல்லாத குசினிகளிலிருந்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியிருக்கிறது. இப்பிரச்சினைகளில் இருந்து சிங்கள பொதுசனத்தின் கவனத்தை திசை திருப்புவதற்கு அரசாங்கம் தமிழ் பகுதிகளில் புதிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அதுபோலவே வைரஸ் தொற்றினால் இறந்துபோன முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைப்பதற்கு அனுமதிக்காமை போன்ற நடவடிக்கைகளும் மேற்படி நோக்கத்தோடுதான் முன்னெடுக்கப்படுகின்றன.
இது விடயத்தில் தமிழ்த் தரப்பு அரசாங்கத்தின் கவனத்தை கலைக்கும் உத்திகளின் பின்னால் இழுபட்டுச் செல்லப் போகின்றதா? அல்லது இவை யாவற்றையும் ஒரு ஒட்டுமொத்த வழிவரைபடத்திற்குள் உள்ளடக்கி உரிமைகளுக்கான ஒரு பரந்துபட்ட ஒன்றிணைக்கப்பட்ட தொடரான போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறதா?என்பதே இப்போதுள்ள முக்கியமான கேள்வியாகும்.
ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு பிரச்சினையைக் கிளப்பி தமிழ் மக்களின் கவனத்தைக் சிதறடிக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இது விடயத்தில் தமிழ் மக்கள் இச்சிறுசிறு பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டுமொத்த பிரச்சினையின் பிரிக்கவியலாத பகுதிகளாக அவற்றை அவற்றின் முழுமையான படத்துக்குள் வைத்து விளங்கிக் கொள்வது அவசியமானது.
தொல்லியல் திணைக்களம்;நில அளவைத் திணைக்களம்; வனவள திணைக்களம்; வனஜீவராசிகள் திணைக்களம்; கடற்றொழில் நீரியல் திணைக்களம்; நீதி பரிபாலனக் கட்டமைப்பு; காவல்துறை போன்ற எல்லாக் கட்டமைப்புக்களும் அல்லது திணைக்களங்களும் அரசாங்கத்தின் உபகரணங்களே. தரைப்படை; வான்படை; கடற்படை; புலனாய்வுத்துறை முதலாக அனைத்தும் அரசாங்கத்தின் உபகரணங்களே. ஒரு அரசின் கொள்கை எதுவோ அதைத்தான் இந்த உபகரணங்கள் முன்னெடுக்கும்.
அரசின் கொள்கை ஒடுக்குமுறை என்றால் அல்லது அரசின் கொள்கை சிங்கள-பௌத்த விரிவாக்கம் என்றால் அதைத்தான் இந்த உபகரணங்கள் முன்னெடுக்கும். 2009க்கு முன்புவரை அரசின் உபகரணங்கள் ஆகிய படையினர் யுத்தத்தை முன்னெடுத்தார்கள். அதில் அவர்கள் 2009 மே மாதம் வெற்றியும் பெற்றார்கள்.
ஆனால் 2009 மே மாதம் வெற்றி கொள்ளப்பட்டது ஒரு விளைவு மட்டுமே. அது மூல காரணம் அல்ல. ஆயுதப்போராட்டம் எனப்படுவது ஒரு விளைவுதான். அது இன ஒடுக்குமுறையின் விளைவு. ஒடுக்குமுறைதான் மூல காரணம். ஒரு பெரிய இனமும் பெரிய மதமும் முழுத்தீவுக்கும் உரிமை கோருவது. இவ்வாறு இன ஒடுக்குமுறையை ஒரு கொள்கையாக கொண்டிருக்கும் அரசுக் கட்டமைப்பின் உபகரணங்கள் ஆகிய படைத்தரப்பு அதை யுத்தமாக முன்னெடுத்தது. இப்பொழுது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் அதே ஒடுக்குமுறையை அரசின் ஏனைய உபகரணங்கள் ஆகிய திணைக்களங்கள் முன்னெடுக்கின்றன.
இச்சிறிய தீவை ஆகக் கூடிய பட்சம் சிங்கள பௌத்த மயப்படுத்தி ஏனைய சிறிய மதங்களின் இனங்களின் மரபுரிமைச் சொத்துக்களை அழித்து எல்லாவற்றையும் சிங்கள மயப்படுத்துவதே அந்த அரசுக் கொள்கையாகும். அதைத்தான் கடந்த 11 ஆண்டுகளாக அரச திணைக்களங்கள் அதிகம் எதிர்ப்பின்றி முன்னெடுத்து வருகின்றன.
தொல்லியல் திணைக்களம் எனப்படுவது இதில் விசேஷமானது. எப்படியென்றால் சிங்கள பௌத்த மயமாக்கலின் கருவிகளில் அது பிரதானமானது. இலங்கைத்தீவின் தொல்லியல்துறை எனப்படுவது சிங்கள பௌத்தத்தை முதன்மைப்படுத்தி பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. அதன்படி தொல்லியல் திணைக்களம் மதப்பல்வகைமைக்கும் இனப் பல்வகைமைக்கும் மரபுரிமைப் பல்வகைமைக்கும் எதிராகச் செயற்படுவது. அது ஒரு பெரிய மதத்தின் ஒரு பெரிய இனத்தின் மேலாண்மையை முன்னெடுக்கும் ஒரு திணைக்களம்.
அதன்படி தொல்லியல் திணைக்களம் ஒரு மரபுரிமை சொத்து அமைத்திருக்கும் இடத்தை தன் பொறுப்பில் எடுத்து தொல்லியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதில் எல்லைக் கற்களை நடும். அரசின் உபகரணங்கள் ஆகிய நீதி பரிபாலனக் கட்டமைப்பும் காவல்துறையும் தொல்லியல் சட்டங்களின் பிரகாரம் அந்த எல்லைக் கற்களுக்கு உட்பட்ட பிரதேசத்தை பாதுகாக்கும். வெடுக்குநாறிமலை; பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில்; கன்னியா வெந்நீரூற்றில்; குருந்தூர் மலை போன்ற இடங்களில் அதைத்தான் அரசாங்கம் செய்ய முயற்சிகிறது.
தொல்லியல் துறையைக் குறித்து ஏற்கனவே சிங்களப் புலமையாளர்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். பேராசிரியை நீரா விக்ரமசிங்க பேராசிரியர் ஜகத் வீரசிங்க,கலாநிதி யூட் பெர்னாண்டோ போன்றவர்கள் இதைக் குறித்து மிக விரிவாக எழுதியிருக்கிறார்கள். கலாநிதி யூட் பெர்னான்டோ 2015 மார்ச் மாதம் கொழும்பு ரெலிகிராப்பில் “மரபுரிமையும் தேசிய வாதமும் – சிறீலங்காவின் விஷம்” என்ற தலைப்பில் மிக விரிவான ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் இது தொடர்பான தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.
(https://www.colombotelegraph.com/index.php/heritage-nationalism-a-bane-of-sri பேராசிரியர் ஜகத் வீரசிங்க சில ஆண்டுகளுக்கு முன் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை ஒன்றில் இலங்கைத் தீவின் தொல்லியல் துறையை “இனவாதத் தொல்லியல்துறை” என்று விவரித்திருக்கிறார். இலங்கைத் தீவின் தொல்லியல் சட்டங்கள் மிகப் பலமானவை. அவை சிங்கள பௌத்த மேலாண்மையை நியாயப்படுத்துபவை. தொல்லியல் சட்டங்களின் கீழ் கைது செய்யப்படும் ஒருவருக்கு பிணை எடுப்பது கடினமானது என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறானதொரு பின்னணியில் யுத்தத்தை வெற்றி கொண்டு ஒரே நாடு ஒரே தேசம் அல்லது ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறிக்கொண்டு வெற்றி கொண்ட இடங்களில் நிலை கொண்டிருக்கும் படைத்தரப்பின் உதவியோடும் ஒத்துழைப்போடும் அரசுத்திணைக்களங்கள் அதே கொள்கையை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறு அரச திணைக்களங்கள் தமது எல்லைக் கற்களை நடும் இடங்களை எடுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். அவையாவும் ஒன்றில் கேந்திர முக்கியத்துவம் மிக்கவை அல்லது வளங்கள் மிகுந்தவை அல்லது அந்த இடத்திலிருந்து ஏனைய இடங்களை கண்காணிப்பது இலகுவானதாக இருக்கும்.
உதாரணமாக குருந்தூர் மலை எனப்படுவது அப்பகுதியிலேயே உயரமான இடம். 1981-ஆம் ஆண்டு அந்த இடத்தில் ஒரு விகாரை அமைக்கும் விதத்தில் அந்த மலையின் உச்சிப் பகுதி மேலும் உயர்த்தப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அந்த முகட்டில் இருந்து பார்த்தால் நாயாறு கடல் ஏரி உட்பட மாவட்டத்தின் ஏனைய சில இடங்களையும் பார்க்கமுடியும் என்று அப்பகுதி வாசிகள் தெரிவிக்கிறார்கள். குருந்தூர் மலைமுகட்டில் இருந்து பார்த்தால் செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலும் அதில் வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலையும் தெரியும் என்று முன்னாள் வட மாகாண சபை அமைச்சர் சிவனேசன் கூறுகிறார். அது ஒரு உயரமான இடம். எனவே அங்கே ஒரு விகாரையை அமைத்தால் அது அந்தப்பகுதி முழுவதற்கும் தெரியும். அதாவது சிங்கள-பௌத்த விரிவாக்கத்தின் வெற்றிச்சின்னமாக அது வானில் உயர்ந்து நிற்கும்.
இப்படித்தான் அண்மையில் தீவுப்பகுதியில் நில அளவைத் திணைக்களத்தால் அளக்கப்பட்ட தனியார் காணிகளில் பெரும்பாலானவை மேட்டுக் காணிகள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல அவை நன்னீர் ஊற்றுக்கள் உள்ள நிலப்பகுதிகள் என்றும் கூறப்படுகிறது. தீவுப்பகுதி நீர்த்தட்டுப்பாடு உள்ள இடம். அங்கெ படைத்தரப்பு அதிகளவு குடிநீரை நுகர்வதாக முறைப்பாடுகள் உண்டு.
இப்படிப்பட்டதொரு பிரதேசத்தில் காணப்படும் நீர்வளம் உள்ள நிலப்பகுதியை நில அளவைத் திணைக்களம் படைத்தரப்புக்கென்று அளக்க முற்படுகின்றது. இவ்வாறு நில அளவைத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்றன தங்களுடைய எல்லைகள் என்று அளவிடும் பிரதேசங்கள் வளம் பொருந்தியவை என்பதோடு கேந்திர முக்கியத்துவம் மிக்கவைகளாகவும் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலப்பரப்புகளை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் அவர்கள் சிங்கள பௌத்த மயமாக்கலை மேலும் விரிவு படுத்தலாம் பலப்படுத்தலாம்.
ஏற்கனவே கிழக்கில் திருமலையிலும் அம்பாறையிலும் தமிழ் மக்களின் இனச்செறிவை அவர்கள் வெற்றிகரமாகக் குறைத்துவிட்டார்கள். மிஞ்சியிருப்பது மட்டக்களப்பு. அங்கே இப்பொழுது மேய்ச்சல் தரைகளை ஆக்கிரமிக்க முற்படுகிறார்கள். மேய்ச்சல் தரைகளை இழந்தால் விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிக்க முடியாது. கால்நடைகள் இன்றி வேளாண்மை முழுமையடையாது. எனவே கால்நடைகளைப் பராமரிக்க முடியாத விவசாயி ஒரு கட்டத்தில் விவசாயத்தையும் கைவிடும் நிலை வரலாம். அப்படி வந்தால் என்ன நடக்கும்?
ஏற்கனவே மட்டக்களப்பில் மண்முனை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் மூன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர்-குடும்பத் தலைவி அல்லது தலைவன்- மத்தியகிழக்குக்கு வேலைக்குப் போய்விட்டார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் உண்டு. இது 2017ஆம் ஆண்டுக்குரிய புள்ளிவிபரம். இவ்வாறு குடும்பத் தலைவனோ அல்லது தலைவியோ வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றால் பிள்ளைகளின் நிலை என்னவாகும்? குடும்பத்தின் நிலை என்னவாகும்? எனவே மேய்ச்சல் தரை விவகாரம் எனப்படுவது தனிய மாடுகளோடு சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல அது மட்டக்களப்பில் விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கக் கூடியது.
ஏற்கனவே கிழக்கில் ஒரு தொல்லியல் செயலணி செயல்பட்டு வருகிறது. அதில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. இப்படியாக மட்டக்களப்பில் தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி அதன்மூலம் அரசாங்கம் சிங்கள-பௌத்த விரிவாக்கத்தை இலகுவாக முன்னெடுக்கலாம். இதுதவிர கிழக்கில் கிழக்கு மையவாதம் என்று கூறிக்கொண்டு ஒரு பகுதி அரசியல்வாதிகள் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு தென்னிலங்கையை நோக்கி திரும்பி விட்டார்கள்.இப்பொழுது மேய்ச்சல் தரைக்கும் ஆபத்து வந்திருக்கிறது. இவ்வாறு கிழக்கு இழக்கப்படுமாக இருந்தால் அதன்பின் தமிழ் மக்கள் தாயகம் வடக்கு-கிழக்கு இணைப்பு என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருக்க முடியாது.
கிழக்குக்கு அடுத்தபடியாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் மணலாறு பிரதேசத்தில் அவர்கள் ஏற்கெனவே வெற்றி பெற்று வருகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தாமரை மொட்டுக்கு அதிக வாக்குகள் கிடைத்த இடங்களுக்கு நிறம் தீட்டினால் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் நிலத் துண்டில் ஒரு பகுதிக்குள் செறிவாக தாமரை மொட்டு நிறத்தை பார்க்கலாம். சில தசாப்தங்களுக்கு முன்பு மணலாறில் சில ஆயிரங்களாக குடியமர்த்தப்பட்ட மக்கள் இப்பொழுது ஒரு தேர்தல் தொகுதி என்று கூறத்தக்க வளர்ச்சியை நோக்கிப் பெருகிவிட்டார்கள்.இதுவும் வடக்கு கிழக்கு இணைப்பை பௌதிக ரீதியாக துண்டிக்கக்கூடியது.
இவ்வாறு கிழக்கில் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு அடுத்தகட்டமாக அரசாங்கம் வடக்கை நோக்கி வரமுடியும். இலங்கைத் தீவில் அதிகம் சன அடர்த்தி குறைந்த மாவட்டங்களில் முல்லைத்தீவும் ஒன்று. அங்கே எண்பத்தியோரு விகித நிலப்பரப்பு அரச திணைக்களங்களிடம் உண்டு. 19 விகிதம் தான் தமிழ் மக்களிடம் உண்டு. அந்த 19 விகிதத்திலும் அபகரிக்க கூடிய பகுதியை எப்படி அபகரிக்கக்கலாம் என்று திணைக்களங்கள் திட்டமிடுகின்றன.
எனவே இது ஒட்டுமொத்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதிதான். அதை ஒட்டுமொத்த ஒடுக்குமுறையில் இருந்து பிரித்துப் பார்க்கமுடியாது. அதுபோலவே அதற்கெதிரான போராட்டமும் முழு அளவிலான ஒட்டுமொத்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தைக் குறித்த ஒட்டுமொத்த தரிசனமுடைய தலைவர்கள் வேண்டும். வடகிழக்கு குடிமக்கள் சமூகத்தால் ஒரு எதிர்ப்பு நடவடிக்கை – பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை என்ற பெயரில் – வரும் மூன்றாம் திகதி முதல் ஆறாந் திகதிவரை ஒழுங்குசெய்யப்பட்டிருகிறது.
ஒரு நாள் கடையடைப்பு; ஒருநாள் எழுகதமிழ்; ஒரு நாள் ஊர்வலம் போன்றனவோ அல்லது குறியீட்டு வகைப்பட்ட கவனஈர்ப்புப் போராட்டங்களோ ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை காலாவதியாகிவிட்டன. முஸ்லிம்கள் அண்மைகாலங்களில் முன்னெடுத்த கபன் துணிப் போராட்டமும் அடுத்தகட்டத்துக்கு வளரவில்லை.காணாமல் ஆகப்பட்டவர்களுக்கான போராட்டமும் அரசியல் கைதிகளுக்கான போராட்டமும் தமிழ் அரசியலின் இயலாமையைக் காட்டுகின்றன. யாரும் போராடி தன்னை எதுவும் செய்ய முடியாது என்று அரசாங்கம் நம்புகிறது.அந்த நம்பிக்கையை உடைக்கத்தக்க விதத்தில் ஒரு புதிய அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்க நாட்டில் யாருண்டு?