கொழும்பு துறைமுகத்தில் இந்திய – சீன தலையீடுகளால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று, இலங்கை பொது துறைமுக பணியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக இந்தியாவின் அதானி குழுமத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு குறித்து, சிறிலங்கா பொது துறைமுக பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நிரோஷன் கோரகனகே,கருத்து வெளியிடுகையில்,
“ஒரு பக்கத்தில் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தை சீன நிறுவனம் ஒன்று இயக்குகின்றது. இந்தநிலையில் மேற்கு முனையம் இந்தியாவின் அதானி குழுமத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு அணியிலும், சீனா இன்னொரு அணியிலும் உள்ளன. இந்த நிலையில், ஏதாவது ஒரு மோதல் ஏற்பட்டால், சிறிலங்காவுக்கு என்ன நடக்கும்? மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பான அரசாங்கத்தின் வாதமும் சந்தேகங்களை எழுப்புகிறது.
கிழக்கு கொள்கலன் முனையத்தை அதானி குழுமம், கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முயன்ற போது, கொழும்பு துறைமுகத்துக்கு 66 வீதமான கொள்கலன்கள் இந்தியாவில் இருந்தே வருகின்ற நிலையில், அவற்றின் மூலமான வருவாயை நாடு இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசாங்கம் கூறியது.
கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியா எடுத்துக் கொண்டால் அவ்வாறு நடக்கும் என்றால், மேற்கு கொள்கலன் முனையத்தை அவர்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏன் அவ்வாறு நடக்காது என்றும் சிறிலங்கா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.