இன்று மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 1911 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
1789ம் ஆண்டில் பிரஞ்சுப் புரட்சியின் போது பெண்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும், வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்களை அடிமைகளாக நடத்தக் கூடாது என வலியுறுத்திப் போராடினர்.
அதை அடக்க நினைத்த மன்னன் 16 ஆம் லூயி போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியுற்றான். 1792 இல் பிரான்ஸ் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது. பதினாறாம் லூயியும் அவனின் மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லட்டின் தலைவெட்டு எந்திரம்மூலம் கொல்லப்பட்டனர்.
இப்போராட்டத்தின் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது. ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசுகள் ஆடிப்போயின. இத்தாலிய பெண்கள், வாக்குரிமை கேட்டு போராடினர்.
பிரான்ஸில் பிரஷ்யனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8.பெண்களின் போராட்டம் அமெரிக்காவிலும் நடைபெற்றது. 1908ஆம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். 1909 பெப்ரவரி 28 ஆம் திகதி நியூயோர்கில் அனைத்துலக உழைக்கும் மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
1910ஆம், ஆண்டு டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனில் அனைத்துலக பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜேர்மனி சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவியான லூயிஸ் ஸியெட்ஸ், ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அனுசரிக்கப்பட வேண்டும், அதில் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்.
இந்த யோசனையை ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளர் கிளாரா ஸெட்கின் வழிமொழிந்தார். அத்துடன் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்களும் ஏகமனதாக இந்த யோசனையை வரவேற்றனர்.
பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பாக 1911ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி முல் தடவையாக சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. டென்மார்க் ஆஸ்திரியா ஜேர்மனி இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதிநிதிகள் முதலாவது சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தின் போதுதான் மார்ச் 8 ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. 1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2030 ஆம் ஆண்டில் அனைத்து சிறுமிகள், சிறார்களும் இலவசமாக சமத்துவ, தரமான ஆரம்பக் கல்வியை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து சிறுவர் சிறுமியரும் சமத்துவமான ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலைகளை அடைவதை உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான அனைத்து வித பாகுபாடுகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பனவும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான ஐ.நாவின் நிகழ்ச்சிநிரல்களில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1977 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையானது மார்ச் 8ம் திகதியை பெண்கள் உரிமைக்கும் உலக சமாதானத்துக்குமான ஐ.நா தினமாக அனுஷ்டிக்குமாறு தனது அங்கத்துவ நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது.
2021 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்துக்கான ஐக்கிய நாடுகளின் தொனிப்பொருள், ‘தலைமைத்துவத்தில் பெண்கள்: கொவிட்19 உலகொன்றில் சமத்துவமான எதிர்காலத்தை அடைதல்’ (“Women in leadership: Achieving an equal future in a COVID-19 world”)) என்பதாகும்.
இத்தொனிப்பொருளானது, சமத்துவமான எதிர்காலத்தை உருவாக்குவதிலும், கொவிட்19 பெருந்தொற்றிலிருந்து மீள்வதிலும் உலகெங்குமுள்ள பெண்களும் சிறுமிகளும் ஆற்றிய அளப்பரிய முயற்சிகளை கொண்டாடுவதுடன், பாலின சமத்துவத்தில் நீடிக்கும் இடைவெளியை சுட்டிக்காட்டுகிறது.
சகல துறைகளிலும் பெண்களின் வினைத்திறனான பங்குபற்றலும் தலைமைத்துவமும் அனைவருக்கும் நன்;மையளிகிறது. எனினும், ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் அண்மையில் விடுத்த அறிக்கையொன்றின்படி, பெத வாழ்ககையிலும் தீர்மானங்களை மேற்கொள்ளலிலும் பெண்கள் குறைந்தளவிலேயே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர்.
உலகில் 22 நாடுகளில் அரச அல்லது அரசாங்கத் தலைவர்களாக பெண்கள் உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிpல் 24.9 சதவீதமானோராகவே பெண்கள் உள்ளனர். இந்த வேகத்தில் சென்றால் அரசாங்கத் தலைவர்களில் பாலின சமத்துவத்தை அடைவதற்கு இன்னும் 130 ஆண்டுகள் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலுக்கான ஐநா நிறுவனத்தின் (UN Women) நிறைவேற்றுப் பணிப்பாளர் பும்ஸில் ம்லாம்போ என்குகா விடுத்துள்ள அறிக்கையில், ‘தமது அனைத்து பல்லினத்தன்மைகள், திறன்கள், கலாசாரங்கள், சமூகம் பொருளாதாரம், அரசியல் நிலைமைகளை பிரதிபலிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளை பிரதிபலிக்கும் பெண்கள் எமக்குத் தேவை. எம் அனைவருக்கும் நன்மையளிக்கும் தீர்மானங்களை மேற்கொள்வதில் பெண்களை இணைப்பதில் உண்மையான சமூக சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரே வழி இது’ எனத் தெரிவித்துள்ளார்.
2021 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எனும் , #IWD2021, #ChooseToChallenge, #IWD2021, #GenerationEquality ஹேஷ்டெக்குகள் சகிதம் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமத்துவமின்மையை எதிர்ப்பதில் பலரும் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்காக ஒரு கையை உயர்த்தி போஸ்கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.