உயிர்த்த ஞாயிறு ஏப்ரல் 21 குண்டு தாக்குதலின் பிரதானியான சஹ்ரான் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் 6 பெண்கள் உட்பட 21 பேரை காத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ்சின் ஆலோசனைக்கு அமைய காத்தான்குடி பிரதேசத்தில் சஹ்ரானுடன் தொடர்பை பேணிவந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதில் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மற்றும் அவர்களுடன் தொடர்பை பேணிவந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 15 ஆண்களும் 6 பெண்களுமாக 21 பேரை கடந்த 4ம் திகதி கைது செய்துள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவர்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.