நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி முன்னிலையாகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
எனினும் பேரணி இடம்பெற்றதுடன் நீதிமன்ற தடை உத்தரவினை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றஞ்சாட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்று கல்முனை பொலிஸாரினால் கடந்த 5 ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த வழக்கு இடம்பெற்றதுடன் நீதிமன்ற தடையுத்தரவை மீறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேந்திரன் சீ.யோகேஸ்வரன் மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேசானந்தன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணையானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.