சிட்னியில் கல்வி கற்றுவந்த இந்திய மாணவி ஒருவர் விபத்தில் மரணமடைந்ததையடுத்து அவரது உடல் உறுப்புக்கள் ஒன்பது பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் கல்விகற்றுவந்த 20 வயதான ரக்சிதா என்ற மாணவி, கடந்த மாத இறுதியில் சிட்னியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
ரக்சிதா உயிர்பிழைக்கமாட்டார் என்பதை உணர்ந்த மருத்துவர்கள் அவரது உறுப்புக்களை தானம் செய்வது தொடர்பில் இந்தியாவிலிருந்த ரக்சிதாவின் பெற்றோருடன் கலந்துரையாடியுள்ளனர்.
ஆரம்பத்தில் இதற்கு உடன்பட மறுத்தாலும், தமது மகள் சமூகசேவை மனப்பான்மை உள்ளவர் என்பதுடன் மற்றவர்கள் மீது எப்போதும் கரிசனை உள்ளவர் என்பதால் இந்த உடல் உறுப்பு தானத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து சுமார் 9 ஆஸ்திரேலியர்களுக்கு ரக்சிதாவின் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டு, அவர்கள் உயிர்வாழ வழியேற்படுத்திவிட்டு ரக்சிதா இவ்வுலகிலிருந்து விடைபெற்றிருக்கிறார்.