ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாம், இலங்கையிலுள்ள சூழலானது மதிப்பிடப்படவேண்டியதாக உள்ளபோது ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையின் 46ஆம் கூட்டத்தொடரிற்கு முன்னதாக இந்தக் கடிதத்தை எழுதுகின்றோம் என்ற தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,
இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுற்ற ஒரு வாரத்திற்குள் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் 23 மே 2009இல் இலங்கைக்கு வருகைதந்தபோது சந்திப்புக்களின் இறுதியில் இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரும் இணைந்து ஒரு கூட்டறிக்கையினை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில், ‘இலங்கையானது சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேசரீதியான பொறுப்புகளுக்கமைய மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளுக்கான தனது பலமான பொறுப்பினை மீளவும் தெரிவித்தது. சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமைகள் சட்டமீறல்களைக் கையாள்வதற்காக பொறுப்புக்கூறல் செயற்பாடு ஒன்றின் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் கோடிட்டுக்காட்டினார். அந்தக் குறைகளை நிவர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்’ என்றிருந்தது.
மேற்படி கடமைகளைக் கையாள்வதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை தவறிய பட்சத்தில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போதான மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை அவதானிப்பதற்காக மூன்று-பேர் கொண்டதொரு குழுவினை ஐ.நா. செயலாளர் நாயகம் 2010 ஜுன் 22 அன்று நியமித்தார்.
நிபுணர்கள் குழுவின் இந்த அறிக்கையானது 2011 மார்ச்சில் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செயலாளர் நாயகம் 2011 செப்ரெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடத்தில் தலைவரிடமும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரிடமும் இந்நிபுணர் குழுபற்றி விளக்கமளித்தார்.
அதன்பின்னர், 2012 மார்ச்சில் ‘இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை முன்னேற்றுவது’ என்ற ’19/2′ தீர்மானத்தினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியது. அப்போதிலிருந்து, மார்ச் 2013 மற்றும் மார்ச் 2014இல் கொண்டுவரப்பட்ட பல தீர்மானங்கள் மூலம் இவ்விடயம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 30/1 (ஒக்ரோபர் 2015), 34/1 (மார்ச் 2017) மற்றும் 40/1 (மார்ச் 2019) ஆகியவற்றிற்கு இலங்கை அரசாங்கமானது, இணை-அனுசரணையும் வழங்கியது.
எனினும், இலங்கையிலுள்ள இருபெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட அரசியல் களமெங்குமுள்ள தலைவர்கள் உறுதியாகவும் விதிவிலக்கின்றியும் தாங்கள் இலங்கைப் படையினரைத் தண்டனைகளிலிருந்து பாதுகாப்போமெனத் தெரிவித்தனர். இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பாக நேர்மையாகக் கையாளக்கூடியதொரு உள்ளூர் நடைமுறைக்கான வழி எதுவுமில்லையென்பதை உறுப்பு நாடுகள் புரிந்துகொள்வதற்கான நேரம் இது தான்.
இராணுவமயமாக்கல்;, அரசியல் கைதிகளின் முடிவற்ற தடுத்துவைப்பு, தொல்பொருளாய்வு என்ற பெயரில் நில அபகரிப்பு, மேய்ச்சல் தரை உரிமைகள் போன்ற பாரம்பரிய, நில உரிமைகள் மறுப்பு, அரசியல் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்பு தீவிரம், முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸா அடக்கம் செய்வதற்கான உரிமைகள் மறுப்பு மற்றும் நினைவேந்தல் உரிமை மறுப்பு உட்பட தொடர்ச்சியானதும் தீவிரப்படுத்தப்பட்டுமுள்ள அடக்குமுறையானது, மோசமடைந்துவரும் சூழ்நிலையினை விளக்குவதற்கான அவசரநிலையினைக் கோடிட்டுக்காட்டுகின்றது.
2021 பெப்ரவரி மற்றும் மார்ச்சில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை 40/1 தீர்மானத்தின் கீழான இலங்கை அரசின் பொறுப்புகளை மதிப்பிடுவதற்காகவும் மேலதிக நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காகவும் சந்திக்கும்போது, இறுதித் தீர்மானத்தின் மூலம்; திட்டவட்டமாக முடிவிற்கு வரும்படி உறுப்பு நாடுகளை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
ஆயுதப் போராட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளடங்கலான மோசமான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான தனது கடமைகளில் இலங்கையானது தவறிவிட்டதென்பதை இத்தீர்மானம் பிரகடனப்படுத்தவேண்டும்.
இத்தகைய சூழலில், இலங்கையில் உள்ளுர் பொறிமுறைகளினூடாகவோ அல்லது கலப்புப் பொறிமுறைகளினூடாகவோ பொறுப்புக்கூறலிற்கான எந்தவொரு வாய்ப்பும் இலங்கையில் இல்லையென்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அதனடிப்படையில் நாங்கள் பின்வருவனவற்றைக் கோருகின்றோம்:
1. ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை மற்றும் ஐ.நா. பொதுச்சபை உட்பட ஐ.நா.வின் ஏனைய உறுப்புகளும் இலங்கை விடயத்தினை கருத்திலெடுத்து இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் பற்றி விசாரணை செய்வதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடமும் ஏனைய பொருத்தமான வினைத்திறன்மிக்க சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளிடமும் பரிந்துரை செய்வதன்மூலம் பொருத்தமான நடவடிக்கையினை அவை எடுப்பதற்குமாக உறுப்பு நாடுகள் புதிய தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும்.
2. ஐக்கி நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களை மேற்குறிப்பிட்டது போல நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் மீண்டும் ஒப்படைத்தல் வேண்டும்.
3. இலங்கையில் வன்முறைகள் இடம்பெறுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதைத் தொடர்வதற்கும் இலங்கையில் குறிப்பாக, ஒழுங்குமுறையாக கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்ற வடக்கு மற்றும் கிழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் களபிரசன்னத்தினை வைத்திருப்பதற்குமாக அலுவலகமொன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.
4. மேலுள்ள முதலாவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிலிருந்து தடம்மாறாமல் பன்னிரெண்டு மாத, திடமான காலக்கெடுவிற்குள் ஐ.நா. பொதுச்சபையின் சிரிய விடயங்களை கையாள்வதற்காக நிறுவிய ‘சர்வதேச சுதந்திர விசாரணைப் பொறிமுறையினை’ (IIIM) ஒத்த, சான்றுகளைச் சேகரிக்கும் பொறிமுறையொன்றினை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
5. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தொடர் தீர்மானம் 1960இன் 1514 (XV) ஆனது, ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளதென்பதைத் தெளிவான சொற்பதங்களில் கூறுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையிலுள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமை வாக்கெடுப்பொன்றிற்கானதொரு பொறியமைப்பிற்கான பொதுவான திட்டத்தினை வழங்கும்படி உறுப்பு நாடுகளிடம் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
பொறுப்புக்கூறலுடனான உறுதியான நடவடிக்கைக்காகவும் மேற்குறிப்பிட்ட விடயங்களை உயர்நீதிமன்றங்களுக்குக் கொண்டுவருவதை விரைவுபடுத்துவதற்கானதுமான தேவையினை நாங்கள் இங்கு மீளவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆகையால், இதுநாள்வரையில் நீதி மறுக்கப்பட்டுவரும் மக்களுக்குத் தீர்வினை வழங்குவதற்கான தீர்மானமிக்க, காலந்தாழ்த்தாத நடவடிக்கையினை எடுக்கும்படியும் உறுப்பு நாடுகளிடம் நாங்கள் வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது.